Home நாடு சோஸ்மா: நசுத்தியோனைச் சாடும் பிகேஆர் – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சோஸ்மா: நசுத்தியோனைச் சாடும் பிகேஆர் – ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

499
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : சோஸ்மா சட்டத்தை மறு ஆய்வு செய்யப் போவதில்லை எனக் கூறியிருக்கும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோனை டாமன்சாரா ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கண்டித்துள்ளார். தன் முடிவை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். காவல் துறையினரின் அடக்கு முறைக்கு வழிகோலும் சட்டங்களுள் சோஸ்மாவும் ஒன்று என அவர் தெரிவித்தார்.

அதே போன்று பிகேஆர் கட்சியின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் காரிமும் நசுத்தியோனைச் சாடியிருக்கிறார். அன்று சீர்திருத்தப் போராட்டம் என்று முழங்கியவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் மாற்றிப் பேசுகிறார்கள் என அவர் சாடினார்.

அன்வார் இப்ராகிமும் சோஸ்மா சட்டத்திற்கு எதிராக 2019-ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்திருக்கிறார் எனவும் ஹாசான் காரிம் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கும் சட்டம் சோஸ்மா என்னும் Security Offences (Special Measures) Act (Sosma) – பாதுகாப்புக் குற்றங்களுக்கான சட்டமாகும்.

குறிப்பாக இந்தியர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மஇகாவும், இந்திய சமூக இயக்கங்களும் சோஸ்மாவுக்கு எதிராகத் தொடர்ந்து கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் சோஸ்மா சட்டம் திருத்தப்படாது – மாறாக நிலைநிறுத்தப்படும் எனக் கூறியுள்ளார். அவரின் அந்த கூற்றுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பெர்சா இயக்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மரியா சின் அப்துல்லா சைபுடின் அப்துல்லாவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சோஸ்மா சட்ட நடைமுறைகள் அநீதிக்கு வழிவகுக்கின்றன என்றும் காவல் துறையினர் போன்ற அரசு சார்பு அமைப்புகள் இந்த சோஸ்மா போன்ற அநீதிகளை வளர்க்கின்றன என்றும் மரியா சின் கூறினார்.

சோஸ்மா நடைமுறைகள் காரணமாக சிலர் நீதிமன்ற விசாரணைகள் முடிந்தும் தொடர்ந்து இந்த சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் – சிலர் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்திருக்கின்றனர்.