
ஜோகூர்பாரு: இங்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற பிகேஆர் பேராளர் மாநாட்டின் இறுதி நாளில் நேற்று சனிக்கிழமை (மே 24) உரையாற்றிய உள்துறை அமைச்சரும், பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ‘ரபிசி ரம்லியை பிகேஆர் கட்சி இழந்து விடுமோ எனக் கவலைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.
கம்மிய குரலில் உணர்ச்சி மிக்க உரையாற்றிய சைபுடின் நசுத்தியோன், “ரபிசி எனது இளைய சகோதரர் போன்றவர். இதே ஜோகூர்பாருவில்தான் இலண்டனில் படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூர் வழியாக வந்த அவரை நான் சந்தித்தேன். அவரின் எதிர்காலம் குறித்து நாங்கள் விவாதித்தோம். அப்போது பெட்ரோனாசில் பணிக்கு சேருவதில் அவர் விருப்பம் கொண்டிருந்தார். அவ்வாறே அவர் பெட்ரோனாசில் இணைந்தார்” என ரபிசியுடனான பழைய நினைவுகளை சைபுடின் நினைவு கூர்ந்தார்.
“பின்னர் 2008-இல் நான் நாடாளுமன்ற உறுப்பினரானபோது எனக்கு உரைகள் எழுதினார். சிலாங்கூரை நாம் கைப்பற்றி அன்வார் இப்ராகிம் பொருளாதார ஆலோசகராகச் செயல்பட்டபோது ஓர் நிர்வாகியை அடையாளம் காட்டுங்கள் என அன்வார் என்னிடம் கூறினார். எனது நண்பர்களிலேயே மிகவும் திறன்வாய்ந்தவர் ரபிசிதான் என நான் பரிந்துரைத்தேன். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும் அவருடனான நட்பும் சகோதரத்துவமும் எப்போதும் குறைந்ததில்லை” என கம்மிய குரலில் சைபுடின் உரையாற்றினார்.