Home நாடு அன்வார் இப்ராகிம் மஇகா தலைமையகத்திற்கு வருகை

அன்வார் இப்ராகிம் மஇகா தலைமையகத்திற்கு வருகை

851
0
SHARE
Ad

கோலாலம்பூர் : விரைவில் மஇகா தலைவர்களைத் தான் சந்திக்கப் போவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். நெகிரி செம்பிலான் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்த அன்வார் இப்ராகிம் மஇகா தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறினார்.

இதன் தொடர்பில் நாளை புதன்கிழமை தலைநகர் மஇகா தலைமையகத்திற்கு வரலாற்றுபூர்வ வருகை ஒன்றை மேற்கொள்ளவிருக்கும் அன்வார் அங்கு மஇகா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

மஇகா தலைமையகக் கட்டடம்

அம்னோ சார்பில் அமைச்சராக, துணைப்பிரதமராக இருந்தபோதும் அன்வார் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்ததில்லை. அதன்பின்னர் தேசிய முன்னணியை எதிர்த்து நடத்திய அரசியல் போராட்டத்தால் மஇகாவுடனும் அவருக்கு சுமுகமான உறவு இருந்ததில்லை.

#TamilSchoolmychoice

இப்போது ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் தேசிய முன்னணியும் இணைந்துள்ளதால் – அந்தக் கூட்டணியில் மஇகாவும் இருப்பதால் – ஒற்றுமை அரசாங்கத்தின் செயலவைக் கூட்டங்களில் – மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் கலந்து கொண்டு வருகிறார்.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி தலைவர் சாஹிட் ஹாமிடி நடந்து கொண்ட விதத்தால், சட்டமன்றத் தேர்தல்களை புறக்கணிக்கும் முடிவை மஇகா எடுத்தது.

மஇகா சட்டமன்றத் தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருப்பதால் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்கள் பல இடங்களில் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்தான் அன்வார் நேரடியாக மஇகா தலைமையகம் வந்து, கட்சித் தலைவர்களைச் சந்தித்து சட்டமன்றத் தேர்தல்களில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும்படியும், பிரச்சாரக் களத்தில் இறங்கும்படியும் மஇகா தலைவர்களைக் கேட்டுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.