Home Photo News பினாங்குக்கு இன்னொரு இந்திய துணை முதல்வர் கிடைப்பார்! இந்திய சமுதாயத்திற்கு இன்னொரு இராமசாமி கிடைப்பாரா?

பினாங்குக்கு இன்னொரு இந்திய துணை முதல்வர் கிடைப்பார்! இந்திய சமுதாயத்திற்கு இன்னொரு இராமசாமி கிடைப்பாரா?

436
0
SHARE
Ad

(பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிறை சட்டமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு வழங்கப்படவில்லை. அந்த சர்ச்சை நாடு தழுவிய அளவில் இந்திய வாக்காளர்களிடையே எதிரொலிக்கிறது. அந்த சர்ச்சை குறித்தும் இராமசாமி கடந்து வந்த அரசியல் பாதையையும் விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

* அதிகாலையிலே தன் கருத்துகளை முகநூல் வழி பதிவிடும் வழக்கம் கொண்டவர்

* தமிழ் மொழி, திராவிட அரசியல், பெரியார் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர்.

*கொள்கைகளுக்காக மலேசியாவுக்கான இந்தியத் தூதரைச் சந்திக்க மறுத்தவர்

#TamilSchoolmychoice

*தமிழ்ப் பள்ளிகளுக்காகப் போராடியவர்

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த தருணம். பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற மும்முரமாகப் போராடியது ஜசெக. அப்போது பினாங்கு முதலமைச்சராக இருந்தவர் டாக்டர் கோ சூ கூன். கெராக்கான் தலைவர். நீண்ட கால பினாங்கு முதலமைச்சர் லிம் சோங் இயூவுக்குப் பின்னர் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தார். 2008 பொதுத் தேர்தலோடு முதலமைச்சர் பதவியை இன்னொருவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு மத்திய அமைச்சராகும் நோக்கத்தைக் கொண்டிருந்தார் கோ சூ கூன்.

அதனால் சட்டமன்றத்திற்கு அவர் போட்டியிடவில்லை. பத்து கவான் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே போட்டியிட்டார். சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து ஜசெக சார்பில் யாரை நிறுத்தப் போகிறார்கள் என்பது ஆர்வத்துடன் பார்க்கப்பட்டது.

கோ சூ கூனுக்கு எதிராக இராமசாமி என்ற புதுமுக வேட்பாளரை – முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுபவரை – நிறுத்தியது ஜசெக. அரசியல் பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இன ரீதியாக வாக்களிக்கும் மலேசியர்களிடையே – 56 விழுக்காடு சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பத்து கவான் தொகுதியில் – இந்திய வேட்பாளரை – அதுவும் ஒரு புதுமுகத்தை – நிறுத்துவது சரியான வியூகமா என்ற கேள்வியும் எழுந்தது.

அதே பத்து கவான் தொகுதி 24 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களையும் கொண்டிருந்தது. போட்டி முடிவில் 9,485 வாக்குகள் பெரும்பான்மையில் கோ சூ கூனை வீழ்த்தினார் இராமசாமி.

அதே 2008 பொதுத் தேர்தலில் பிறை சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் எல்.கிருஷ்ணனை 5,176 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார் இராமசாமி.

யார் இந்த இராமசாமி என்ற கேள்விக் கணைகளும் தேடுதல்களும் நாடு முழுமையிலும் எழுந்தன.

விரிவுரையாளராகப் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்

பாங்கி மலேசிய தேசியப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தவர் இராமசாமி. இந்திய சமூகம் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். பல மேடைகளில் இந்திய சமுதாயப் பிரச்சனைகளை ஆணித்தரமாக வாதிட்டவர்.

இந்தோனிசியாவின் சுமத்ரா மாநிலத்திலுள்ள ஆச்சே பிரதேசத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கான சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றவர். இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டத்திலும் அனைத்துலக அளவில் ஆலோசகராகச் செயல்பட்டவர். மலேசியப் பல்கலைக் கழகங்களில் பின்பற்றப்படும் இனரீதியானப் போக்குகளை பல மேடைகளில் பகிரங்கமாகச் சாடியவர். அனைத்துலக சஞ்சிகைகளில் தொடர்ந்து தனது கட்டுரைகளை எழுதி வந்தவர்.

2005-இல் தேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து அவர் காரணமின்றி பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் காலம் அவருக்கு இன்னொரு முக்கிய வாய்ப்பைத் தரக் காத்திருந்தது.

தேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து விலகியவுடன் மற்ற பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார் இராமசாமி. 2005 முதல் ஜசெகவில் தீவிர அரசியல் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

2008 பொதுத் தேர்தலில் பினாங்கிலுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 19-ஐ ஜசெக கைப்பற்றியது. பிகேஆர் 9 தொகுதிகளைக் கைப்பற்றியது. பினாங்கு மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சி அமைத்த ஜசெக இரண்டாவது துணை முதல்வராக இந்தியர் ஒருவரை – இராமசாமியை – நியமித்தது.

அவரின் அரசியல் பயணமும் தொடங்கியது.

அதிகாலையிலேயே தன் கருத்துகளைப் பதிவிடுபவர்

இராமசாமியின் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் ஒன்றைக் கவனித்திருப்பார்கள். காலை 7 மணிக்கே அன்றைய அரசியல், சமூக விவகாரம் குறித்த அவரின் கருத்து ஆங்கிலத்தில் அவரின் முகநூல் பக்கத்தில் பதிவாகியிருக்கும். அதில் அவர் குறிப்பிடும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க ஆங்கில அகராதியைக் காலையிலேயே தேட வேண்டியிருக்கும்.

ஒருமுறை நேர்காணலுக்காக அவரைச் சந்தித்தபோது, எப்படி அவ்வாறு காலையிலேயே எழுதுவது சாத்தியமானது என்பதை விவரித்தார் இராமசாமி. “காலையிலேயே எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கமுள்ளவன் நான். நடைப் பயிற்சியின் போதே எனது சிந்தனையும் கருத்துகளும் உருவாகத் தொடங்கும். வீட்டுக்கு வந்து அமர்ந்ததும், எனது கைப்பேசியிலேயே எனது பதிவை தட்டச்சு செய்து முடித்து விடுவேன்” எனக் கூறினார் அவர்.

பெரியார், திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு

துணை முதலமைச்சர் என்ற உயர்ந்த பதவியை வகித்தபோதும் எந்த நிலையிலும் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டவர் இராமசாமி. தான் சார்ந்திருந்த பக்காத்தான் கூட்டணியோ – அதன் தலைவர்களோ – முரண்பாடாக ஏதாவது செய்திருந்தாலும் – அதைத் தயவு தாட்சண்யமின்றி தயங்காமல் சுட்டிக் காட்டியவர். அதனால் பல சர்ச்சைகளையும் சந்தித்தவர்.

அவ்வாறு அவர் தெரிவித்த சில கருத்துகளினால்தான் ஸாகீர் நாயக் தொடுத்துள்ள வழக்கையும் நீதிமன்றத்தில் எதிர்நோக்கி வருகிறார் இராமசாமி.

இராமசாமியின் இன்னொரு முகம் பெரியார் தத்துவங்களிலும், திராவிடக் கொள்களைகளிலும் அவர் கொண்டிருந்த ஈடுபாடு. இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்தவர்.

இந்திய தூதரைச் சந்திக்க மறுத்தவர்

இலங்கைத் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவலங்களுக்காக பினாங்கு துணை முதல்வர் பதவியில் இருந்தபோதும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் கலைஞர் கருணாநிதியின் தமிழக அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் இராமசாமி. அதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு செல்வதற்கான அனுமதியும் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

ஒருமுறை மலேசியாவுக்கான இந்தியத்தூதர் விஜய் கோகலே பினாங்குக்கு மரியாதை நிமித்தம் வருகை தந்தார். இராமசாமியையும் சந்திக்க அனுமதி கேட்டார். அவரைச் சந்திக்க மறுத்து விட்டார் இராமசாமி. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அந்த முடிவை எடுத்தார் இராமசாமி.

பினாங்கு மாநில இந்திய நலன்களுக்காகப் போராட வேண்டியவர் – இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுகிறாரே – தன்னைச் சந்திக்க வந்த இந்தியத் தூதரை சந்திக்காமல் புறக்கணிக்கிறாரே – எனக் குறைகூறியவர்களும் உண்டு.

அங்குதான் இராமசாமி வித்தியாசப்பட்டு நின்றார். தான் வகிக்கும் பதவிக்காக தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் – யாருக்கும் வளைந்து கொடுக்காமல் – தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

தமிழ் மொழி – தமிழ்ப்பள்ளி ஈடுபாடு

தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளிகள் மீதும் பற்று கொண்டிருந்தவர். பினாங்கில் 29-வது தமிழ்ப் பள்ளியை நிர்மாணிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். பினாங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளி ஒன்றை அமைக்க வேண்டும் என்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

இந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

ஒருபுறம் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவராக சமயப் பணிகளை ஆற்றிக் கொண்டே, பெரியார் கொள்கைகளையும், திராவிடப் பாரம்பரியங்களையும் சரிநிகராகத் தூக்கிப் பிடித்தவர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இராமசாமி பொறுப்பேற்ற போது சில ஆயிரங்களை மட்டுமே வங்கிக் கணக்கில் கொண்டிருந்தது அந்த அமைப்பு. இன்று அவரின் திறமையான தலைமைத்துவ வழிகாட்டுதலோடு பல ஆலயங்களை நிர்வகித்து வருகிறது. முறையான திட்டமிடலோடு கூடிய நிர்வாகத் திறனால் மில்லியன் கணக்கான சொத்துகளைக் கொண்ட அமைப்பாக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மேம்பாடு கண்டிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் சென்று ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களைச் சந்தித்தார். தன் பூர்வீக கிராமத்திற்கும் சென்று வந்தார்.

இராமசாமி குடும்பத்தின் தமிழக பூர்வீகக் கிராமம் – அங்கு நடந்த சம்பவங்கள் – அவரின் தந்தையார் பழனிசாமியும் தாயார் பழனியம்மாளும்  சித்தியவானுக்கு வந்து தோட்டப் புறங்களில் பாடுபட்டது – இராமசாமி உள்ளிட்ட சகோதர, சகோதரிகளின் இளம் வயது வாழ்க்கைப் போராட்டங்கள் – போன்ற விவரங்களை இராமசாமியின் சகோதரி விரிவாக தன்வரலாறாக ஆங்கிலத்தில் நூலாக  எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

பேதமின்றி அனைவரையும் சந்தித்தவர்

துணை முதல்வராக பணியாற்றிய காலத்தில் இன்னொரு சிறந்த வழக்கத்தையும் கடைப்பிடித்தார் இராமசாமி. யாராக இருந்தாலும் சிறியவர், பெரியவர் எனப் பார்க்காமல் – எதற்காக வருகிறார்கள் என ஆராயாமல் – சந்திப்புக்கான நேரம் ஒதுக்கி தன்னை நாடி வருபவர்களைப் பார்த்து விடுவார். தேவைப்படும் உதவிகளையும் செய்வார்.

அவ்வாறு சந்தித்தவர்களுடன் புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். பதவிகளில் அமர்ந்ததும் மக்களைச் சந்திக்காமல் ஒதுங்கும் அரசியல்வாதிகளிடையே அவர் எளிமையானவராக – வித்தியாசமானவராகத் திகழ்ந்தார்.

ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றபோது, ஒரு பிரபல இந்திய வணிகருடன் தன் அறையில் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தார். அறைக் கதவுகள் திறந்திருக்க அவர்கள் பேசுவதை வெளியில் அமர்ந்திருப்பவர்களும் கேட்க முடிந்தது. அந்த அளவுக்கு தன் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையைக்  கடைப்பிடித்தார்.

மூன்று தவணைகளாக சட்டமன்ற உறுப்பினர் – ஒரு தவணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் – 3 தவணைகளாக துணை முதல்வர் – எனப் பொறுப்பு வகித்த இராமசாமியின் சகாப்தம் அவரின் 74-வது வயதில் அவரின் சிறந்த பணிகளோடு ஒரு நிறைவுக்கு வந்துள்ளது. இந்த முறை அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மீண்டும் ஒரு தவணைக்கு சேவையாற்ற கோரிக்கை விடுத்தும் அவரின் அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. .

இந்திய சமுதாயத்திற்கான அவரின் போராட்டம் இன்னொரு பாதையில் இன்னொரு கோணத்தில் தொடரும் என நம்பலாம்.

அவருக்குப் பதிலாக பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூவும் திறமையானவர் – வணிகத் துறையில் சாதனைகள் புரிந்தவர்- என்கிறார்கள்.

அடுத்த பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வர் என்ற பதவி சுந்தரராஜூவுக்கோ ஜக்டீப் சிங்குக்கோ கிடைக்கலாம்.

எப்படியும் பினாங்கு மாநிலத்திற்கு இன்னொரு இந்தியத் துணை முதல்வர் கிடைத்துவிடுவார்!

ஆனால், கல்வித் திறனும் அறிவாற்றலும், துணிச்சலும் ஒருங்கே அமையப்பெற்று, தன் பதவியைக் கொண்டு, இந்திய சமூகத்திற்காக உரத்து குரல் கொடுத்துவந்த இராமசாமியைப் போன்ற இன்னொரு போராளி இந்திய சமுதாயத்திற்கு கிடைப்பாரா?