Home இந்தியா நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் – ஆகஸ்ட் 8-இல் விவாதம்

நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் – ஆகஸ்ட் 8-இல் விவாதம்

596
0
SHARE
Ad

புதுடில்லி : மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறும்.  ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையே கடந்த மே மாதம் 3-ஆம் தேதி முதல் மோதல்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்பில் நரேந்திர மோடியின் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன.

எதிர்க்கட்சிகள் இணைந்து தற்போது இந்தியா என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்துள்ளன. இந்தக் கூட்டணியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றம் அமளி துமளியுடன் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவைக்கு உள்ளே விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான பரிந்துரையை சமர்ப்பித்தனர்.

50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானப் பரிந்துரையை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள 545 இடங்களில் பெரும்பான்மையாக 301 இடங்களை பாஜக வைத்திருக்கிறது.

இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைய வாய்ப்பில்லை. எனினும் இன்னும் ஓராண்டுக்குள் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.