அலாகாபாத், ஜனவரி 15 – இந்தியாவின் புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, காவிரி ஆகிய நதிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் அருகே திரிவேணி சங்கமமாக ஒன்றிணைகின்றன. இந்த புன்னிய தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘மகா கும்பமேளா’ எனப்படும் திருவிழா நடைபெற்று வருகின்றது.
கடந்த 2001-ம் ஆண்டு கடைசியாக இந்த திருவிழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நேற்று அலகாபாத்தில் மகா கும்ப மேளா திருவிழா தொடங்கியது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடினர். இந்த திருவிழாவின் போது திரிவேணி சங்கமத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கி, அவர்கள் நீண்ட ஆயுள் பலத்தையும், இறவாத புகழையும் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பக்தர்கள் வசதிக்காக 15 கி.மீட்டர் நீளத்திற்கு தற்காலிக சாலைகள், 18 பாலங்கள், 35 ஆயிரம் கழிப்பறைகள், 22 ஆயிரம் தெரு விளக்குகள், 14 சுகாதார நிலையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இமயமலையில் தவத்தில் ஈடுபட்டிருக்கும் மகான்களும், சாமியார்களும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு ஆயிரக்கணக்கில் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.