Home Featured உலகம் அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளிப் பெண் ஆளுநர் நியமனம்!

அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளிப் பெண் ஆளுநர் நியமனம்!

1082
0
SHARE
Ad

nikki_haley-south-carolina-governor

வாஷிங்டன் – அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் கட்டம் கட்டமாக தனது அமைச்சரவை உறுப்பினர்களையும், தூதர்களையும், முக்கிய அரசு அதிகாரிகளையும் தேர்வு செய்து வருகின்றார்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கான அமெரிக்கத் தூதர் என்ற முக்கியமான பதவிக்கு தென் கரோலினா மாநிலத்தின் ஆளுநரான நிக்கி ஹேலி என்பவரைத் தேர்வு செய்துள்ளார். இந்தப் பதவி அமைச்சர் பதவிக்கு நிகரானதாகும்.

#TamilSchoolmychoice

44 வயதான நிக்கி ஹேலி டிரம்ப் அமைச்சரவையின் முதலாவது பெண் உறுப்பினர் என்பதோடு, முதலாவது இந்திய-அமெரிக்க வம்சாவளியினராவார்.

அவரது நியமனம் அமெரிக்க செனட் மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டால், அவர் அமெரிக்க அமைச்சர் அந்தஸ்தோடு கூடிய பதவியை வகிக்கும் முதலாவது இந்திய வம்சாவளியினராகத் திகழ்வார்.

அமெரிக்க அதிபர் ஒருவரை அமைச்சராக நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார் என்றாலும், அந்த நியமனத்தையும், நியமிக்கப்பட்டவரின் பின்புலத்தையும் அமெரிக்க செனட்டர்கள் கொண்ட ஒரு குழு ஆராய்ந்து உறுதிப்படுத்தும். அதன் பின்னரே அவர் பதவி ஏற்க முடியும்.

நிம்ரதா நிக்கி ரந்தாவா என்ற இயற்பெயரைக் கொண்டவர் நிக்கி ஹேலி. அமெரிக்காவின் முதலாவது மாநில ஆளுநராகத் (கவர்னர்) தேர்ந்தெடுக்கப்பட்டவர் போபி ஜிண்டால். இவர் லூயிசியானா மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர்.

இவரை அடுத்து, மாநில ஆளுநராக இரண்டாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்மணி நிக்கி ஹேலியாவார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த சீக்கியப் பெற்றோருக்குப் பிறந்தவர் நிக்கி.இவரது பெற்றோர்கள் இளம் வயதிலேயே அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள்.

மைக்கல் ஹேலி என்ற அமெரிக்கரை மணந்த நிக்கிக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இவரது கணவர் ஓர் இராணுவ வீரர் என்பதோடு, ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க இராணுவப் படையில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.