டாக்கா, மார்ச்.21- வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் சிங்கப்பூர் மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 85.
சிறுநீரக கோளாறு மற்றும் மூச்சுத் திணறல் நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்காக, இம்மாதம் 10-ஆம் தேதி சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடன் மகன், மகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் மருத்துவமனையில் இருந்தனர்.
அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6.47 மணிக்கு உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்ததாக, சிங்கப்பூருக்கான வங்கதேச தூதர் கூறினார்.
முன்னதாக வங்கதேசத்தில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையில் ரஹ்மான் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு உடல்நிலை மேலும் மோசமடையவே, சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டார்.
ரஹ்மான் அண்மையில் தான் தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடினார். மறைந்த ரஹ்மான் வங்கதேச நிறுவனரான ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு நெருங்கிய உதவியாளராக இருந்துள்ளார்.