இன்று பிற்பகலில் சசிகலாவைச் சந்தித்த பின்னர் பதவி விலகுவதை பன்னீர் செல்வம் உறுதிப்படுத்தினார். அதன் பின்னர் அவர் போயஸ் கார்டனிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதிமுக தலைமையகம் வந்தார்.
அங்கு சசிகலாவை அடுத்த முதல்வராக பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக வழிமொழிந்தனர்.
சசிகலா உரை…
தமிழகத்தின் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்த சசிகலா அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்க தன்னை வற்புறுத்தியவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் என்று கூறினார்.
தொடர்ந்து, அதிமுகவின் சார்பில் முதல்வராகப் பதவியேற்கும்படியும் ஓ.பன்னீர் செல்வம் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் சசிகலா தனதுரையில் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கேற்ப அதிமுக ஆட்சி தனது தலைமையில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் சசிகலா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
ஜெயலலிதா பாணியிலேயே பச்சை நிறப் புடவையில் அதிமுக அலுவலகம் வந்தார் சசிகலா. அவரது நடை, உடை, பாவனைகளும் ஜெயலலிதா பாணியிலேயே அமைந்திருந்தன.