Home Featured தமிழ் நாடு ஓபிஎஸ்-திமுக-காங்கிரஸ் இணைந்து அடுத்த ஆட்சியா?

ஓபிஎஸ்-திமுக-காங்கிரஸ் இணைந்து அடுத்த ஆட்சியா?

591
0
SHARE
Ad

சென்னை – புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கத் தாமதிக்கும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டத்துறை விற்பன்னர்களின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள வேளையில், அதிமுகவைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக தலைமையை அணுகியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அடுத்த தமிழக அரசாங்கத்தை அமைக்க திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவிக்கும் என்றும் ஆரூடங்கள் எழுந்துள்ளன.

sasikala-governor-9 febதனக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நேற்று வியாழக்கிழமை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும் சசிகலா…

#TamilSchoolmychoice

சட்டமன்றத்தைக் கூட்டி சசிகலா-பன்னீர் செல்வம் இரண்டு தரப்பும் தங்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் முடிவெடுக்கக் கூடும் என்ற கருத்து நிலவும் வேளையில், அதிமுகவிலிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பிரித்து விட்டால், அதிமுகவுக்குத் தேவைப்படும் 117 சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் கொண்டிருக்க முடியாத சூழல் ஏற்படும்.

அந்த சமயத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவர் அடுத்த முதல்வராக ஆளுநர் முடிவெடுக்கக் கூடும்.

sasikala-meeting-governorஆளுநருடனான சந்திப்பின்போது சசிகலா…

தற்போது 89 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுகவும், 8 பேரைக் கொண்ட காங்கிரசும் அவர்களின் ஆதரவு கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இணைந்தால், மொத்தம் 98 எண்ணிக்கை வருகிறது.

மேலும் சுமார் 20 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பன்னீர் செல்வம் இழுத்து வந்து விட்டால், புதிய ஆட்சியை திமுக-காங்கிரஸ் துணையுடன் அவரால் அமைக்க முடியும் என்ற ஒரு சட்டக் கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால், நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையைக் கொண்டுதான் ஆட்சி அமைப்பேன், திமுகவின் ஆதரவோடு ஆட்சி அமைக்க மாட்டேன், அது அம்மாவின் கொள்கைக்கு விரோதமானது என ஒரு பேட்டியில் ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

sasikala-governor-ministersசசிகலா ஆளுநரைச் சந்தித்தபோது உடன்வந்த தமிழக அமைச்சர்கள்….

ஆனால், நடக்கின்ற அரசியல் போராட்டத்தில் எல்லாத் தரப்பினரின் கொள்கைகளும் காற்றில் பறக்கும் என்றே தெரிகின்றது.

தமிழக சட்டமன்ற நிலவரம் குறித்தும், தமிழக சட்டமன்றம் கூட்டப்பட்டால், என்ன முடிவெடுப்பது என்பது பற்றி கலந்தாலோசிக்க இன்று வெள்ளிக்கிழமை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

-செல்லியல் தொகுப்பு