சென்னை – திருவண்ணாமலை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வனரோஜா பன்னீர் செல்வத்துக்கு நேற்றிரவு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் வனரோஜாவின் வரவு அவரது அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இருப்பினும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு போதுமானதாக இல்லை.
இன்று முதல் சசிகலாவின் ‘வேறு மாதிரியான’ போராட்டம்
இதற்கிடையில், நேற்று கூவத்தூர் கோல்டன் பே உல்லாச விடுதி சென்று அங்கு தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து விட்டு போயஸ் கார்டன் திரும்பிய சசிகலா, பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் பொறுத்திருந்தோம். ஆனால், ஆளுநர் தாமதப்படுத்துவதன் மூலம் எங்களின் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் செய்யப்படுகின்றன. சனிக்கிழமை (இன்று) முதல் எங்களின் போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும்” என எச்சரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை முதல் சசிகலாவின் போராட்டம் எந்த கோணத்தில் இருக்கப் போகிறது என இந்திய ஊடகங்கள் ஆரூடங்களைத் தொடங்கியுள்ளன.
வட இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அனைத்தும் தங்களின் ஒளிபரப்புகளை தமிழகத்தையும், பன்னீர்-சசிகலா போராட்டத்தையும் மையப்படுத்தியே வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தில் எழுந்துள்ள அரசியல் போராட்டம் அனைத்து இந்தியாவையும் கவர்ந்திருப்பதற்குக் காரணம், இந்த விவகாரத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் சில கூறுகள், ஆளுநரின் அதிகாரம் என்பது போன்ற பல சட்ட அம்சங்கள் சர்ச்சைக்குள்ளாகியிருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகள், சட்ட அறிஞர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எனப் பலதரப்பட்ட பிரிவினரின் கவனமும் தமிழகம் பக்கம் தற்போது திரும்பியிருக்கிறது.
இதன் தொடர்பில் மேலும் சில அண்மைய நிலவரங்கள்:-
- அதிமுக அமைச்சரான பெஞ்சமின் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணையப் போவதாக, பன்னீர் செல்வத்தின் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றும் கையெழுத்து இயக்கம் ஒன்றை ஓ.பன்னீர் செல்வம், தனது முதல் கையெழுத்திட்டு தனது இல்லத்திலிருந்து தொடக்கியுள்ளார்.
-செல்லியல் தொகுப்பு