Home Featured தமிழ் நாடு “சென்னை சிறையையும் பார்த்து விட்டேன்! பெங்களூரையும் பார்த்து விட்டேன்! எதற்கும் அஞ்சமாட்டேன்” சசிகலா போர்முகம்!

“சென்னை சிறையையும் பார்த்து விட்டேன்! பெங்களூரையும் பார்த்து விட்டேன்! எதற்கும் அஞ்சமாட்டேன்” சசிகலா போர்முகம்!

585
0
SHARE
Ad

கூவத்தூர் – சென்னையை அடுத்துள்ள கூவத்தூரிலுள்ள கோல்டன் பே விடுதிக்கு வந்து அங்குள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியதோடு அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்த சசிகலா தனது உரைகளில் மன உறுதியையும், போர்முகத்தையும் காட்டி தனது எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

“சென்னை சிறையையும் பார்த்து விட்டேன். பெங்களூர் சிறையையும் பார்த்து விட்டேன். இனி எதற்கும் அஞ்ச மாட்டேன். அம்மாவைப் போல் ஒரு பெண் என்பதால் என்னை மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது” என்றும் அவர் மன உறுதியுடன் உரை ஆற்றியது அதிமுக தொண்டர்களிடையேயும், அவருக்கு ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்களிடத்திலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sasikala-speaking-admk-meetசசிகலா (கோப்புப் படம்)

#TamilSchoolmychoice

டில்லி வரை போய்ப் பார்த்து விடுவோம் என்றும் அவர் கூறினார்.

அம்மாவின் ஆட்சியை அமைப்போம், ஜெயலலிதாவின் உருவப் படத்தை சட்டசபையில் திறந்து வைப்போம் என்றும் அவர் முழங்கினார். அம்மாவின் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பதைத் தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என்றும் சசிகலா குற்றம் சாட்டினார்.

சசிகலா தன்னை ஆதரிக்கும் அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களையும் தன் பின்னால் அணிவகுத்து நிற்க வைத்ததும், இவர்கள் அனைவரும் சுதந்திரமாக இங்கு இருக்கிறார்கள் என்று கூறியதும், அவர் மீதான சில ஐயப்பாடுகளை இன்று நீக்கியிருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

மேலும், இன்று அவர் ஆற்றிய உரைகளின்போது எந்தவித குறிப்புகளும் இன்றி பேசியதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்மூலம், தலைமைத்துவத்தை ஏற்று அத்தனை எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள அவர் தயாராகி விட்டார் என்பதையும் அவரது உரைகள் காட்டுகின்றன.

மேலும் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு உடனுக்குடன் துணிச்சலுடன் பதிலளித்ததும் பார்வையாளர்கள் மத்தியில் நிச்சயம் சில மனமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் எனக் கருதப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு