Home Featured தமிழ் நாடு “என்னைப் பார்த்து சிரித்து விடாதீர்கள்” – பழனிசாமிக்கு ஸ்டாலின் கிண்டல்!

“என்னைப் பார்த்து சிரித்து விடாதீர்கள்” – பழனிசாமிக்கு ஸ்டாலின் கிண்டல்!

829
0
SHARE
Ad

stalin1_1சென்னை – முதல்வராகப் பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில் “என்னைப் பார்த்து சிரித்துவிட வேண்டாம்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாகக் கூறியுள்ளார்.

சேலத்திலிருந்து இரயில் மூலம் சென்னை வந்து சேர்ந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்  பின்வருமாறு தெரிவித்தார்:

#TamilSchoolmychoice

“மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை நீக்கும் விதத்தில் புதிய முதலமைச்சராக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நியமித்து விரைவில் தனது அமைச்சரவைச் சகாக்களுடன் பதவி ஏற்கும்படி மாண்புமிகு தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். 2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான ஒன்பது மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை அதிமுக சட்டமன்றக் கட்சி தேர்வு செய்து ஒரு விநோதமான “ஹேட்ரிக்” சாதனை செய்திருக்கிறது”

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரே நோக்கமாக இருந்தது என்பதும், குறிப்பாக கடந்த 5ம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் இதை பல்வேறு தளங்களில் வலியுறுத்தி வந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே நேரடியாக மாண்புமிகு ஆளுநர் அவர்களை சந்தித்து “நிலையான அரசு அமைக்க அரசியல் சட்டத்திற்குட்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை மனுவினை கொடுத்து வலியுறுத்தியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பதவிக்காக அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிகளோ, உள்கட்சி குழப்பங்களோ, அதிகாரப் போட்டியின் விளைவான கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டங்களோ, க்ரீம்ஸ் சாலை பட்டாசு வெடிக்கும் காட்சிகளோ, மாநிலத்தின் நலனுக்கு எவ்விதத்திலும் ஆபத்தாக முடிந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் அக்கறை காட்டியது என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்திட விரும்புகிறேன்.

புதிதாக அமையப் போகும் ஆட்சியைப் பொறுத்தமட்டில் ஏற்கனவே செயல்படாமல் உறக்கத்தில் இருந்த அதிமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவேதான் நான் பார்க்கிறேன். முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவு, அதன் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் செயல்படாத அரசு, இப்போது சிறையில் இருக்கும் அதிகார மையத்தின் பரிந்துரையால் நியமிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் என்று தமிழக அரசு நிர்வாகம் மேலும் ஸ்தம்பித்துப் போகும் சூழ்நிலையை நோக்கித் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சேலம் சென்றதால் முதல்வர் பதவியேற்புக்கு வர இயலவில்லை

தமிழகத்தைச் சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும், மக்கள் படும் அவதிகளுக்கும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சூழலுக்கும் தீர்வு காணும் வகையில் தமிழகம் ஒரு “செயல்படும் நல்ல அரசு நிர்வாகத்தை” இந்த புதிய அரசின் மூலம் பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனாலும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு புதிய முதல்வரை நியமித்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்திருந்தாலும், அமையப் போகும் அரசால் தமிழக மக்களுக்கு நீடித்த நிம்மதி கிடைக்குமா என்பதிலும் தெளிவு இல்லை.

இந்நிலையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்றுக் கொள்கிறார் என்றும், அதற்கான அழைப்பிதழ் வந்திருக்கிறது என்றும், நான் முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக சேலம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் எனது உதவியாளர் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆகவே அவசர கோலத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிமோட் கண்ட்ரோல் முதல்வராகச் செயல்பட வேண்டாம்

புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், “பெங்களூர் ஜெயிலுக்கு” சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப் பட்டுக் கொண்டு இருக்காமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கும் பாதகம் வராமல், பெங்களூரிலும், இங்கேயும் உள்ள அதிகார மையங்களின் ஆசைக்கேற்ற “ஆட்டுவித்தலுக்கு” ஏற்றார் போல் ஆட்சியை நடத்தாமல், முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”