கோலாலம்பூர் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த திங்கட்கிழமை, கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரண்டு பெண்களால் விஷம் தெளித்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜோங் நம்மின் சடலத்தில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், வடகொரியா சடலத்தை அனுப்பி வைக்குமாறு மலேசியாவிற்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.
எனினும், ஜோங் நம்மின் குடும்பத்தினர் வந்து மரபணு மாதிரியை அளித்து, இறந்தவரின் மரபணுவுடன் அது ஒத்துப் போனால் மட்டுமே சடலத்தைத் தர முடியும் என சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் அப்துல் சமா மாட் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
“இதுவரை அவரது நெருங்கிய உறவினர்கள் யாரும் சடலத்தைக் கேட்டு வரவில்லை. எங்களுக்கு இறந்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்க மரபணு மாதிரி தேவைப்படுகின்றது. சடலத்தை அனுப்பும் படி வடகொரியா கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் அதற்கு முன் சடலத்தை யார் என்று அடையாளம் காண வேண்டும்” என்று அப்துல் சமா மாட் செய்தியாளர்களிடம் கூறினார்.