கோலாலம்பூர் – ஓர் அதிகாரத்துவ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று புதன்கிழமை கோலாலம்பூருக்கு வந்த பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிர்பாராத ஒரு சிக்கல் நேர்ந்திருக்கின்றது.
கோலாலம்பூரில் லிம் குவான் எங் பயணத்திற்காக பொதுப்பணித் துறையின் புரோட்டோன் பெர்டானா எக்சிகியூடிவ் ரக கார் ஒன்றை பினாங்கு அரசாங்கம் வாடகைக்கு எடுத்திருந்தது.
ஆனால், அந்தக் காரில் ஏறியதும்தான், அந்தக் காரின் பின்கதவு சாத்த முடியாத அளவுக்கு பழுதுபட்ட நிலையில் இருந்ததை குவான் எங் பார்த்திருக்கிறார். இருந்தாலும் அவர் செல்ல வேண்டிய அதிகாரத்துவ நிகழ்ச்சி நடைபெற்றது மாமன்னர் அரண்மனையில் என்பதால், உடனடியாக செல்ல வேண்டிய நேர நெருக்குதலால், பழுதான அந்தக் காரின் கதவைக் கையால் பிடித்துக் கொண்டே, பயணம் செய்ய வேண்டிய அவல நிலையும் குவான் எங்குக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதே வேளையில் தனக்கு வழங்கப்பட்ட கார் மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பதுபோல் பசை நாடாக்களால் ஒட்டப்பட்டு, ஒரு முதலமைச்சர் இப்படிப்பட்ட ஒரு காரில் பயணம் செய்து அரண்மனையை அடைய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டதாக குவாங் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
“எனவே, புரோட்டோன் கார் வைத்திருப்பவர்கள் தங்களின் கார் கதவுகளை நன்கு பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்றும் லிம் குவான் எங் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்திருக்கிறார்.
அடுத்த முறையாவது தனக்கு பாதுகாப்பான காரை பொதுப்பணித் துறை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக குவான் எங் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.