கோயம்புத்தூர் – இங்குள்ள வெள்ளியங்கிரி பகுதியில், ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிவனின் மார்பளவுத் தோற்றம் கொண்ட 112 அடி உயரமுள்ள சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
தனி விமானம் மூலம் மாலை 5.30 மணியளவில் கோவை வந்தடைந்த அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றார்கள்.
பின்னர் அவர்கள் அனைவரும் கோவை விமான நிலையத்தில் இருந்து ஒரே ஹெலிகாப்டரில் ஈஷா யோகா மையம் சென்றடைந்தார்கள்.
பிரம்மாண்டமான ஆதியோகி சிலையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த விழா மேடை…
ஈஷா யோகா மையத்தில் மோடியின் வருகைக்காகக் காத்திருந்த ஈஷா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பொன்னாடை போர்த்தி பிரதமரை வரவேற்றார். பின்னர் சத்குரு மோடியை அழைத்துச் சென்று ஈஷா மையத்தின் முக்கியப் பகுதிகளை சுற்றிக் காண்பித்தார்.
ஈஷா மையத்தின் பிரதான வழிபாட்டு இடமான தியானலிங்கம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்ற மோடி, அங்கு தியானலிங்கத்திற்கு தீபாராதனை காட்டினார். பின்னர் அங்கு அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.
அதன் பின்னர் பிரதான விழா மேடைக்கு வந்து ஆதியோகி சிலையை மோடி திறந்து வைத்தார்.
ஆதியோகி சிலையை மோடி திறந்து வைக்கிறார்….
நிகழ்ச்சியில் சத்குரு மோடி முன்னிலையில் உரையாற்றினார். ஈஷா யோகா மையம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் ஆதியோகி சிலை வடிவம் குறித்தும் தனது உரையில் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
சத்குருவின் உரைக்குப் பின்னர் மோடி சுமார் அரை மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அனைவருக்கும் எனது அன்பான வணக்கம் எனத் தமிழில் கூறி மோடி தனது உரையைத் தொடக்கினார்.
இந்து மதக் கடவுள்கள் ஒவ்வொருவரும் ஒரு விலங்கைத் தங்களின் வாகனமாகக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒன்றுக்கொன்று பகைமை கொண்ட அந்த விலங்குகளைத் தங்களின் வாகனங்களாகக் கொண்டதன் மூலம், முரண்பட்ட அனைத்தையும் ஒற்றுமையாக ஓரிடத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை இந்து மதக் கடவுள்கள் உணர்த்தியிருக்கின்றனர் என்றும் மோடி தனதுரையில் கூறினார்.
“எத்தனையோ இந்து விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், சிவராத்திரிதான் மகா சிவராத்திரி என அழைக்கப்படுகின்றது. எத்தனையோ தேவ கடவுள்கள் இருந்தாலும் சிவன்தான் மகாதேவன் என அழைக்கப்படுகிறார். சிவ மந்திரம்தான் மகா மந்திரம் என அழைக்கப்படுகின்றது”என்றும் மோடி தெரிவித்தார்.
யோகாவின் முக்கியத்துவத்தையும் மோடி தனதுரையில் வலியுறுத்தினார். தனது உரை முடிந்தவுடன் இரவு 9.30 மணியளவில் மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுச் சென்றார். இன்றிரவே, மோடி புதுடில்லி திரும்புகிறார்.
ஆதியோகி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட திரளான மக்கள் கூட்டம்…
மோடி வருகையை முன்னிட்டு கோவையில் உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவை நகரைச் சுற்றிப் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
திறந்து வைக்கப்பட்ட ஆதியோகி சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள்….
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம், மகா சிவராத்திரியை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. அதில் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி, ஆதியோகி சிவனின் திருவுருவச் சிலை திறப்பு, பிரதமரின் வருகை என கூடுதல் சிறப்புகளோடு கொண்டாடப்படுகின்றது.
படங்கள்: நன்றி – ஈஷா யோகா மையம் டுவிட்டர் – இணையப் பக்கங்கள்
– செல்லியல் தொகுப்பு