லாஸ் ஏஞ்சல்ஸ் – இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் ஆச்சரியமான மற்றொரு தேர்வு வாழ்நாள் சாதனையாளர் வரிசையில் கௌரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட ஜேக்கி சான்.
சினிமா உலகில் சிலர் இருப்பார்கள். கோடிக்கணக்கான டாலர்கள் வசூல் மழை பெய்யும் படங்களில் நடித்திருப்பார்கள் அல்லது தயாரித்தோ, இயக்கியோ இருப்பார்கள். சினிமாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை ஆற்றியிருப்பார்கள். ஆனால், வணிக ரீதியாகவே சினிமாவில் இயங்கும் அவர்களுக்கு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்பே இல்லை.
இவர்களைப் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து ஆஸ்கார் அகாடமி, ஆஸ்கார் விருதளிப்பு விழாவுக்கு சில மாதங்களுக்கு முன்னால் நடைபெறும் ஆஸ்கார் கவர்னர்களுக்கான (annual Governors Awards) விருந்து வைபவத்தில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கும்.
அந்த வகையில் 2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜேக்கி சானுக்கு கடந்த நவம்பர் 12-ஆம் தேதி ஒரு விருந்து வைபவத்தில் வழங்கப்பட்டது. அதனை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ஜேக்கி சான்.
ஜேக்கி சான் இதுவரை 250 படங்களில் பங்கு கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்திருக்கும் அவர், பின்னர் துணை நடிகராகவும், சண்டைக் காட்சி நடிகராகவும், சண்டைக் காட்சிகள் அமைப்பவராகவும், கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
மலேசிய மாமன்னரிடமிருந்து ‘டத்தோ’ விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் ஜேக்கி சான். 2015-ஆம் ஆண்டில் கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு டத்தோ விருதை ஜேக்கி சான்னுக்கு நமது மாமன்னர் வழங்கி கௌரவித்தார்.
மலேசியாவில் ஜேக்கி சான்னின் பல படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கின்றது. ஜேக்கி சான்னின் பல படங்களில் மலேசியாவும் ஒரு களமாகக் காட்டப்பட்டிருக்கின்றது.
-செல்லியல் தொகுப்பு