கோலாலம்பூர் – ‘முப்பரிமாணம்’ என்ற தலைப்பும், சாந்தனுவின் மிரட்டலான தோற்றமும், இப்படத்தின் கதை மீது வேறு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது ஒரு திகில், சைக்கோ திரைப்படமாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது.
ஆனால் இது முற்றிலும் காதலை மையமாகக் கொண்ட திரைப்படம். காதலுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும், காதலர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையின் வழி சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குநர் அதிரூபன்.
கதைச்சுருக்கம்
சாந்தனுவும், ஷிருஷ்டியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். ஆனால் அவர்களின் குடும்பத்தாருக்கு இடையில் தீராத பகை இருந்து வருகின்றது.
என்றாலும், பருவ வயதை அடைந்தவுடன் சாந்தனுவும், ஷிருஷ்டியும் காதலில் விழுகிறார்கள். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரிய வந்து பிரச்சினை பூதாகரமாக வெடிக்கிறது. இருவரும் ஊரை விட்டு ஓடத் திட்டமிடுகிறார்கள்.
ஆனால், சாதி வெறி பிடித்த ஷிருஷ்டி குடும்பத்தார் நிச்சயமாக அவளை உயிரோடு விடமாட்டார்கள் என்பதை உணரும் சாந்தனு, தனது காதலைத் தியாகம் செய்து, காதலி எங்கிருந்தாலும் உயிரோடாவது இருக்கட்டும் என்று எண்ணி விலகுகிறார்.
இப்படியிருக்க, ஷிருஷ்டிக்கு, ஸ்கந்தா அசோக்குடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திடீரென திருமணத்தில் அத்துமீறி நுழையும் சாந்தனு, ஷிருஷ்டியை கொலைவெறியோடு கடத்திச் செல்கிறார்.
விட்டுக் கொடுத்த காதலியை சாந்தனு கடத்துவது ஏன்? என்பது தான் படத்தின் திருப்பம்.
ரசிக்க
படத்தின் கதையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே தெரிந்த கதை தான் என்றாலும், கடைசி வரை படம் பார்ப்பவர்கள் அதை உணராத வகையில் திரைக்கதை அமைத்து, கடைசிக் காட்சியில் மிகப் பெரிய திருப்பத்தை வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அதிரூபன்.
சாந்தனு, ஷிருஷ்டி, ஸ்கந்தா அசோக் இவர்கள் மூன்று பேருக்குமே நடிப்பதற்கும், திறமையை வெளிப்படுத்துவதற்கும் இடமுள்ள கதை. அதனை உணர்ந்து மூவருமே சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார்கள்.
மென்மையாக இருந்து முரட்டுத்தனமாக மாறும் கதாப்பாத்திரத்தை சாந்தனு மிகவும் ரசிக்கும் படியாகச் செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் அவரது நடிப்பிற்கும், சண்டைக்காட்சிகளில் அவரது முரட்டுத்தனத்திற்கும் நிறையவே வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
அதேபோல், ஷிருஷ்டிக்கும் இரண்டு விதமான நடிப்பு. அதனை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். கடைசிக் காட்சியில் சிறப்பாக நடித்தது சாந்தனுவா, ஷிருஷ்டியா என்று யோசிக்கும் அளவிற்கு இருவருமே சிறந்த நடிப்பு.
அதேபோல், ஸ்கந்தா அசோக்கும், ‘நடிகர் சந்தோஷ்’ கதாப்பாத்திரத்தை மிக அழகாக, மென்மையாக நடித்து அனைவரின் மனதையும் கவர்கிறார்.
இவர்களோடு, அப்புக்குட்டி, ‘கயல்’ புளோரண்ட், ரவி பிரகாஷ், தம்பி இராமையா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
ராசாமதியின் ஒளிப்பதிவில் பொள்ளாட்சியும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களும், கேரளா படகுவீடும் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையும், பாடல்களும் காட்சிகளுக்கு பக்க பலம் சேர்த்துள்ளன. என்றாலும், கேட்டவுடன் மனதில் நிற்கும் படியான வித்தியாசமான பாடல்கள் இல்லை.
சலிப்பு
சாந்தனு, ஷிருஷ்டி காதலில் எதார்த்தம் இருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம். மாறாக, பார்த்துப் பழகிய காதல் காட்சிகள் சற்று சலிப்பையே ஏற்படுத்துகின்றன.
சுவாமிநாதன், அப்புக்குட்டி, தம்பிராமையா என மூன்று காமெடி நடிகர்கள் இருந்தும் கூட படத்தில் சிரித்து ரசிக்கும் படியான காமெடி இல்லை.
படத்தில் சாந்தனு போதைக் காட்சிகள், கிளைமாக்சில் சில தேவையற்ற காட்சிகள் போன்றவற்றை கத்தரி போட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
மொத்தத்தில், ‘முப்பரிமாணம்’ – காதல் கதையில் எதிர்பாராத திடீர் திருப்பம்!
-ஃபீனிக்ஸ்தாசன்