கோலாலம்பூர் – இந்து மதத்தை இழிவுபடுத்தி விட்டார் என நாடு முழுவதிலும் உள்ள பல இந்து அமைப்புகள் பெர்லிஸ் இஸ்லாமியத் துறைத் தலைவர் (முஃப்தி) டாக்டர் முகமட் அஸ்ரிக்கு (படம்) எதிராக நேற்று நாடு முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் புகார்களைச் செய்திருப்பதைத் தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
அனைத்து சமயங்களையும் சரிசமமாக அரசாங்கம் கருத வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இந்திய சமுதாயத்திற்குப் பயனளிக்கும் வகையில் பிரதமர் நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வந்தாலும், பெர்லிஸ் முஃப்தி போன்றவர்கள் விடுக்கும் அறிக்கைகள், பேச்சுகள் அவை எல்லாவற்றையும் கெடுக்கும் வண்ணம் திசை திருப்பி விடுகின்றன.
போதாக் குறைக்கு, ஜாகிர் நாயக் போன்றவர்களுக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்குவது போன்ற முடிவுகளும், அரசாங்கத்தின் இந்தியர்களுக்கான நற்பணிகளை திசை திருப்பி விடுகின்றன.
இதுபோன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து பிரச்சாரம் செய்வதால், அதனாலும், அரசாங்கத்தின் இந்தியர் நலத் திட்டங்கள் போதிய தாக்கத்தை இந்திய சமுதாயத்தில் ஏற்படுத்தத் தவறிவிடுகின்றன என்பதையும் கவனத்தில் கொண்டு அரசாங்கம், பெர்லிஸ் முஃப்தி போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் இதுபோன்ற தவறான, திசை திருப்பும் அறிக்கைகள் மீண்டும் எழாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்பதும் இந்திய இயக்கங்கள், சமுதாயத்தினரின் எண்ணமாக இருக்கிறது.