கோலாலம்பூர் – அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ முஸ்தபா மொகமட், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் மக்களோடு, மக்களாக, மருத்துவரைச் சந்தித்து சிகிச்சைப் பெறக் காத்திருந்த புகைப்படம் பேஸ்புக்கில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
(அமைச்சர் முஸ்தபா மொகமட் – இரண்டாவது வரிசையில் வெள்ளைச்சட்டை அணிந்திருப்பவர்)
இது குறித்து முஸ்தபாவிடம் ஊடகங்கள் கேட்டதற்கு, “கோலாலம்பூர் சிறப்பு மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மருத்துவரைச் சந்திக்கும் நேர இடைவெளியில், பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று முஸ்தபா தெரிவித்திருக்கிறார்.
தான் வெளிநாட்டுப்பயணம் முடித்து நாடு திரும்பியதில் இருந்து, தனக்கு உடலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கச் சென்றதாகவும் முஸ்தபா கூறியிருக்கிறார்.
முஸ்தபாவின் எளிமையைக் கண்டு பேஸ்புக்கில் பலரும் பாராட்டி வருகின்றனர்.