Home நாடு எல்ஆர்டி விபத்து: தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 பயணிகள்!

எல்ஆர்டி விபத்து: தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 பயணிகள்!

549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த திங்கட்கிழமை இரண்டு எல்ஆர்டி இரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பயணிகள் மூளை இரத்த உறைவினால் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஹெரிக் கோரே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அந்தப் பயணிகள் மூவருக்கும் அறுவைச் சிகிச்சை நடந்திருப்பதாகவும் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் ஒரு பயணிக்கு தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களைத் தவிர மேலும் 3 பயணிகள் எலும்பு முறிவு, நெஞ்சுப் பகுதி காயங்கள், ஈரல் போன்ற உடலின் உட்பாகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயணிகளில் 67 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவர்களில் 61 பேர் இதுவரையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் ஹெரிக் கோரே நேற்று செவ்வாய்க்கிழமை (மே 25) நடத்திய சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

விபத்து ஏற்பட்டது ஏன்?

இதற்கிடையில் எல்ஆர்டி விபத்து குறித்துக் கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், பயணிகள் இல்லாத எல்ஆர்டி இரயில், 213 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு இரயிலுடன் நேருக்கு நேர் மோதிய சம்பவம், ஓட்டுனர் தவறான திசையில் சென்றதால் ஏற்பட்டது என்று கூறினார்.

நடந்த சம்பவத்திற்கு மனித தவறே காரணம் என்று முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று வீ கூறினார். இதன் விளைவாக 47 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

இரயில் எண் 40- இன் ரயில் ஓட்டுநர் சரியான இலக்கு நிலையைப் பின்பற்றத் தவறிவிட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

பயணிகள் இல்லாத இரயில் ஆரம்பத்தில் தானாகவே இயக்கப்பட்டது. இது கம்போங் பாரு நிலையத்திலிருந்து தெற்கே டாங் வாங்கி நிலையத்தை நோக்கிச் சென்றது. இருப்பினும், தொழில்நுட்ப சிக்கலை சந்தித்ததால், அது மனித கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.