Home நாடு “புத்தர் மகானின் போதனைகளை நினவு கூர்வோம்” – விக்னேஸ்வரனின் விசாக தின வாழ்த்துச் செய்தி

“புத்தர் மகானின் போதனைகளை நினவு கூர்வோம்” – விக்னேஸ்வரனின் விசாக தின வாழ்த்துச் செய்தி

543
0
SHARE
Ad

விசாக தினத்தை முன்னிட்டு  மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

உலகின் எல்லா மதங்களும் நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும் மனிதர்களுக்கு போதிப்பவை. அந்த மதங்களைத் தோற்றுவித்த மகான்களும் சமூகத்தை நல்வழிப்படுத்தும் நல்ல பல தத்துவங்களையும், கருத்துகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்.

அந்த வரிசையில் புத்த மதம் தனித்தன்மை வாய்ந்தது. அமைதி, மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு வைத்தல், உலக ஆசைகளைத் துறந்து வாழ்வது, மன சாந்திக்கான தியானம், போன்ற பல நல்ல கருத்துகளை நமக்குப் போதித்த புத்த மகான் தோற்றுவித்த மதம்.

பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புத்தரின் போதனைகளும், தத்துவங்களும் இன்றும் பின்பற்றப்படுகின்றன. போற்றப்படுகின்றன.

#TamilSchoolmychoice

அந்த புத்த மகானின் பிறப்பு, அவர் ஞானம் பெற்றது, அன்னாரின் மறைவு என அவரின் வாழ்க்கையின் மூன்று முக்கிய சம்பவங்களையும் ஒருநேர புத்த மதத்தினர் சிறப்பித்துக் கொண்டாடும் இன்றைய விசாக தினத்தில் புத்த மதத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டில் எல்லா மத்தினரின் திருவிழாக்களையும் போல, விசாக தினமும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். புத்தர் ஆலயங்களில் வழிபாடுகள், ஊர்வலங்கள் எனக் கொண்டாடப்படும் விசாக தினத்தில் புத்த மதத்தினர் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இணைந்து கொள்வதை நாம் பார்க்க முடியும்.

நமது நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று, விசாக தினக் கொண்டாட்டங்களும், நாடெங்கிலும் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும் புத்த ஆலயங்களும்.

ஆனால், இந்த முறை கொவிட்-19 பாதிப்புகளால் நாடெங்கிலும் விசாக தினக் கொண்டாட்டங்களை சிறிய அளவிலேயே கொண்டாட வேண்டிய நிலைமைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

இருப்பினும் புத்தர் மகானும், அவரின் நினைவுகளும் இன்றும் நிலைத்து நிற்பதற்கும், போற்றப்படுவதற்கும் காரணம் அந்த மகானின் நல்லொழுக்க போதனைகள்தான்!

எனவே, கொவிட் காரணமாக விசாக தினக் கொண்டாடங்களின் அளவு குறைந்தாலும், அந்த புத்த மகானின் கருத்துகளுக்கும், நல்லொழுக்க போதனைகளுக்கும் என்றும் மதிப்பு குறைவதில்லை.

புத்த மகானின் வழிகாட்டுதல்களையும், போதனைகளையும் இந்த விசாக தின நன்னாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம். இயன்றவரையிம் நாமும் பின்பற்றுவோம்.

விசாக தினத்தைக் கொண்டாடும் அனைத்து புத்தமதத்தினருக்கும் எனது நல்வாழ்த்துகள்.