Home Photo News ஆயர் ஹீத்தாம்: மசீச தலைவர் வீ கா சியோங் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்குமா?

ஆயர் ஹீத்தாம்: மசீச தலைவர் வீ கா சியோங் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்குமா?

407
0
SHARE
Ad

(நாட்டில் அனல் பறக்கும் பிரச்சாரங்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆயர் ஹீத்தாம். இங்கு போட்டியிடுகிறார் மசீச தலைவர் வீ கா சியோங். அவரின் அரசியல் எதிர்காலத்தை தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும். அவரை எதிர்த்து ஜசெகவின் மலாய் வேட்பாளர் வெற்றிபெறுவாரா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

15ஆவது பொதுத்தேர்தலில் பரபரப்பாகக் கவனிக்கப்படும் – அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நிலவும் – ஆயர் ஹீத்தாம் தொகுதி, 2018 பொதுத்தேர்தலிலும் இதேபோன்று ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டது.

அந்தப் பொதுத்தேர்தலில் அங்கு போட்டியிட்ட மசீச தலைவர் வீ கா சியோங்கை எதிர்த்து ஜோகூர் ஜசெக தலைவர் லியூ சின் தோங் போட்டியிட்டார். 58 விழுக்காடு மலாய் வாக்காளர்களை ஆயர் ஹீத்தாம் அப்போது கொண்டிருந்தது.

கடந்த முறை ஆயர் ஈத்தாமில் போட்டியிட்ட லியூ சின் தோங் குடும்பத்தினருடன் ஜசெக வேட்பாளர் ஷேக் ஓமார்
#TamilSchoolmychoice

38 விழுக்காட்டினர் மட்டுமே சீனர்கள். எஞ்சிய நான்கு விழுக்காட்டினர் சீனர்கள். இந்த வாக்காளர்களின் இன விழுக்காட்டு கலவையால் ஒட்டுமொத்த மேற்கு மலேசியாவையும் பிரதிபலிக்கும் வண்ணம் இந்தத் தொகுதி அமைந்திருக்கின்றது என அப்போது கூறினார் லிம் கிட் சியாங்.

ஜசெகவின் மூத்த தலைவரான அவர் மற்றொரு ஆரூடத்தையும் முன்வைத்தார். இந்தத் தொகுதியில் ஜசெக வெற்றிபெற்றால் நாங்கள் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி மூலம் புத்ராஜெயாவையும் கைப்பற்றுவோம் என முழங்கினார்.

அவரின் முதல் ஆரூடம் பலிக்கவில்லை. 303 வாக்குகள் பெரும்பான்மையில் வீ கா சியோங் இத்தொகுதியில் வெற்றிபெற்றார். எனினும் லிம் கிட் சியாங்கின் இரண்டாவது ஆரூடம் பலித்தது. பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றியது.

தொகுதி மாறிய லியூ சின் தோங்

கடந்த பொதுத் தேர்தலில் ஆயர் ஈத்தாம் தொகுதியில் போட்டியிட்ட லியூ சின் தோங் – இந்த முறை ஜோகூரின் இஸ்கண்டார் புத்திரியில் போட்டியிடுகிறார்.

அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த ஜசெகவின் லியூ சின் தோங், லிம் கிட் சியாங்கின் அன்பிற்கும் – கவனிப்புக்கும் – உரிய இரண்டாங்கட்டத் தலைவர்களுள் ஒருவர். ஆயர் ஹீத்தாமில் தோல்வியடைந்தாலும், அடுத்த சில மாதங்களில் லியூ சின் தோங் செனட்டராகவும் தற்காப்புத் துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

ஷெரட்டன் நகர்வு காரணத்தினால் பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்ததால் லியூ சின் தோங் துணையமைச்சர் பதவியை இழந்தார். இந்தப் பொதுத்தேர்தலில் ஜோகூரின் இஸ்கண்டார் புத்ரி தொகுதியில் லிம் கிட் சியாங் மீண்டும் போட்டியிடவில்லை. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டார்.

தனக்குப் பதிலாக இஸ்கண்டார் புத்ரியில் லியூ சின் தோங்கை நிறுத்தி, அவருக்காகப் பிரச்சாரமும் செய்துவருகிறார் லிம் கிட் சியாங். இதிலிருந்து லியூ சின் தோங் மீது லிம் கிட் சியாங் கொண்டிருக்கும் நம்பிக்கையை நாம் புரிந்து கொள்ளலாம்.

லியூ சின் தோங் ஜோகூர் மாநில ஜசெக தலைவருமாவார். தேசிய அளவில் ஜசெகவின் துணைத் தலைமைச் செயலாளருமாவார். ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் பெர்லிங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சரி, மீண்டும் ஆயர் ஹீத்தாம் தொகுதிப் பிரச்சினைக்கு வருவோம்.

மலாய் வேட்பாளரை நிறுத்தி, வியூகத்தை அதிரடியாக மாற்றிய ஜசெக

மசீசவின் தேசியத் தலைவரை அவரின் தொகுதியிலேயே தோற்கடிக்க வேண்டும் என இந்த முறையும் கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறது ஜசெக. தன் பிரச்சார வியூகத்தையும் அதிரடியாக மாற்றியிருக்கிறது.

ஆயர் ஈத்தாமில் வழக்கம்போல் சீன வேட்பாளரை நிறுத்தாமல் ஒரு மலாய் வேட்பாளரை  நிறுத்தியுள்ளது ஜசெக. அவர்தான் ஷேக் உமார் பக்ஹாரி அலி.

இதன் காரணமாக இந்தத் தொகுதியில் இனச்சார்பு வாக்களிப்பு எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

மலாய்க்காரர்களின் விரோதி என அம்னோவால் வர்ணிக்கப்படும் ஜசெக கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு மலாய் வேட்பாளருக்கு மலாய்க்காரர்கள் ஆதரவு தருவார்களா?

அவ்வாறு அவர்கள் தர முடிவுசெய்தால் – அதன் மூலம் பத்து அல்லது பதினைந்து விழுக்காடு மலாய் வாக்காளர் ஆதரவைப் பெற்றால் – இத்தொகுதியில் ஜசெக வேட்பாளர் வெல்ல முடியும்.

அதேசமயத்தில் சீன வாக்காளர்கள் எப்படி முடிவெடுக்கப் போகிறார்கள்?

பாரம்பரியமாக ஜசெகவுக்கு வாக்களிப்பார்களா? அல்லது ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர் நிற்பதால் அவரைப் புறக்கணித்துவிட்டு இனச்சார்பு அடிப்படையில் சீனர் என்ற முறையில் வீ கா சியோங்கிற்கே வாக்களிப்பார்களா?

இந்த இனச்சார்பு வாக்களிப்பு எப்படி இருக்கும் என்ற குழப்பத்தால் இத்தொகுதியில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்ற நிச்சயமற்ற நிலை உருவாகியிருப்பதால் பரபரப்பாகக் கவனிக்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது ஆயர் ஹீத்தாம்.

ஊசலாடும் வீ கா சியோங்கின் அரசியல் எதிர்காலம்

மசீச தலைவர் வீ கா சியோங்கின் எதிர்கால அரசியல் தலைவிதியும் இத்தொகுதியின் வெற்றி தோல்வியில்தான் ஊசலாடுகிறது.

அவருக்கு இருக்கும் சாதகம் ஏற்கெனவே அவர் இரண்டு தவணைகளாக இத்தொகுதியைத் தற்காத்து வருகிறார் என்பதாகும்.

2013 பொதுத்தேர்தலிலும் 2018 பொதுத்தேர்தலிலும் அவர் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்று வந்திருக்கிறார். அந்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கக்கூடும். இந்தத் தொகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்களையும் வீ கா சியோங் கொண்டு வந்திருக்கின்றார். குறிப்பாக கோவிட்–19 காலகட்டத்தில் அவர் தொகுதி மக்களுக்கு உடனுக்குடன் வழங்கிய உதவித் திட்டங்களால் அவர் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறார்.

ஜசெகவின் மலாய் வேட்பாளர் ஷேக் உமார் பின்னணி

ஷேக் உமார் இத்தொகுதிக்குப் புதியவர். 2018 பொதுத்தேர்தலில் பாலோ சட்டமன்ற உறுப்பினராக ஜோகூரில் வெற்றிபெற்ற அவர், ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

2022 ஜோகூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாலோ தொகுதியை மசீச-தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றியது. பாலோ சட்டமன்றத்தைத் தற்காப்பதில் தோல்வியடைந்த ஷேக் உமாருக்கு, ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறது ஜசெக தலைமைத்துவம்.

ஆயர் ஹீத்தாம் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் யோங் பெங், செமாராங் ஆகியவையாகும். 2018 பொதுத்தேர்தலிலும் 2022 ஜோகூர் சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய முன்னணியே செமாராங் சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றியது.

2018 பொதுத்தேர்தலில் மற்றொரு சட்டமன்றத் தொகுதியான யோங் பெங்கில் ஜசெக வெற்றிபெற்றது. ஆனால் 2022 ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் லிங் தியான் சுன் மசீச – தேசிய முன்னணி சார்பில் யோங் பெங் தொகுதியில் வெற்றிபெற்றார்.

ஆக ஆயர் ஹீத்தாம் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகளும் தேசிய முன்னணி கைவசம் இருப்பதால் வீ கா சியோங் ஆதரவு தளம் இங்கே அதிகரித்துள்ளது எனலாம்.

ஆனால் ஜோகூர் மாநிலத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களை அடிப்படையாக வைத்து 15-வது பொதுத்தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

61,041 மொத்த வாக்காளர்களைக் கொண்டுள்ளது ஆயர் ஹீத்தாம் தொகுதி.

வீ கா சியோங் மீண்டும் ஆயர் ஹீத்தாம் தொகுதியைத் தற்காப்பதில் தோல்வி கண்டால், அவரின் மசீச தலைமைத்துவத்திற்கு எதிராகவும் எதிர்ப்புக் குரல்கள் வலுக்கும்.

எனவே, வீ கா சியோங்கின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதத்திலும் அரசியல் பார்வையாளர்களால் ஆவலுடன் பார்க்கப்படும் தொகுதி ஆயர் ஹீத்தாம்.

– இரா.முத்தரசன்