Home நாடு ஆராவ்: பெரிக்காத்தான் கூட்டணி சார்பிலும் வெற்றிவாகை சூடுவாரா ஷஹிடான் காசிம்?

ஆராவ்: பெரிக்காத்தான் கூட்டணி சார்பிலும் வெற்றிவாகை சூடுவாரா ஷஹிடான் காசிம்?

428
0
SHARE
Ad

(பிரச்சார அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்று பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஆராவ். அம்னோவின் அமைச்சர் ஷஹிடான் காசிம் கட்சி மாறி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுவதால்தான் இந்தப் பரபரப்பு. கடந்த பல தவணைகளாக தேசிய முன்னணி சார்பில் வெற்றி பெற்று வந்த இந்தத் தொகுதியில் சின்னம் மாறி நின்றாலும் – பெரிக்காத்தான் கூட்டணி சார்பில் போட்டியிட்டாலும் மீண்டும் வெற்றிவாகை சூடுவாரா ஷஹிடான் காசிம்? விவாதிக்கிறார் இரா. முத்தரசன்)

பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு – தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிதான் – என அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்தது முதல் அம்னோ வட்டாரத்தில் சில சந்தேகங்கள் எழுந்தன.

இஸ்மாயில் சப்ரிக்கு நெருக்கமான அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பதுதான் அந்தச் சந்தேகங்கள். அம்னோ வேட்பாளர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதும் சந்தேகங்கள் உண்மையாயின. இஸ்மாயில் சப்ரிக்கு நெருக்கமான சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

அவ்வாறு வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் சிலர் தலைமைத்துவத்தின் முடிவை ஏற்று தொடர்ந்து கட்சிக் கட்டுப்பாட்டுடன் தேர்தல் பணிகள் ஆற்றிவருகின்றனர். ஆனால் அந்த முடிவை ஏற்காமல் வீறுகொண்டு வெளியேறியிருப்பவர் ஷஹிடான் காசிம்.

கூட்டரசுப் பிரதேச அமைச்சராகப் பணியாற்றியவர். வாய்ப்பு மறுக்கப்பட்ட அம்னோ நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஷஹிடான் காசிம் மட்டும் தனித்து பார்க்கப்படுவதற்கு முக்கியக் காரணம் – அவர் தன் பழைய தொகுதியான ஆராவ் நாடாளுமன்றத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பாக மீண்டும் போட்டியிடுவதுதான்.

அம்னோவிலிருந்து வெளியேறிய அவரை வாரி அணைத்துக்கொண்டார் முஹிடின் யாசின். உடனடியாக மீண்டும் ஆராவ் தொகுதியில் பெரிக்காத்தான் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பும் தந்தார். அம்னோவால் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றொரு பெர்லிஸ் – பாடாங் பெசார் – நாடாளுமன்ற உறுப்பினர் ஸைடி பின் ஸைனுல் அபிடின் அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றொரு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் அப்துல் முத்தலிப் மாரான் (பகாங்) தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிட மீண்டும் வாய்ப்பில்லை எனத் தெரியவந்ததும் பாஸ் கட்சியில் இணைந்தார் அப்துல் முத்தலிப். அதைத் தொடர்ந்து மாரான் தொகுதிக்கான பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் அதிகமாகக் கவனிக்கப்படவில்லை. காரணம் ஒருவர் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றார். மற்றொருவர் தேசிய முன்னணி வலிமையுடன் திகழும் பகாங் மாநிலத்தில் போட்டியிடுகிறார்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்ற சிலர் – உதாரணமாக முன்னாள் அமைச்சர் அனுவார் மூசா – தொடர்ந்து தன் கெத்தேரே தொகுதியில், தனக்குப் பதிலாக நிறுத்தப்பட்டிருக்கும் புதிய வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஷஹிடான் காசிம் மீண்டும் வெல்வாரா?

ஆராவ் தொகுதியைக் கடந்த பல தவணைகளாகத் தற்காத்து வருபவர் ஷஹிடான். 2013– 2018 பொதுத்தேர்தல்களில் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றார். அதிலும் 2018 பொதுத்தேர்தலில் நாடெங்கும் தேசிய முன்னணிக்கு எதிரான அலை வீசியபோதும் 4,856 வாக்குகள் பெரும்பான்மையில் ஆராவ் தொகுதியில் வெற்றிபெற்றார் ஷஹிடான்.

பக்காத்தான் ஆட்சி கவிழ்ந்தபோது தொடர்ந்து முஹிடின் யாசின் அமைச்சரவையிலும் இஸ்மாயில் சப்ரி அமைச்சரவையிலும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். பெர்லிஸ் எப்போதுமே தேசிய முன்னணியின் கோட்டையாக விளங்கிவந்திருக்கும் மாநிலம். அங்கே, அவர்களின் அரசியல் எதிரிகளான பாஸ் கட்சியும், பக்காத்தாத்தானும் தங்களின் அரசியல் ஆளுமையை நிரூபிக்க இயலவில்லை.

இந்த முறை பாஸ் கட்சி பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்திருப்பதால் பெர்லிஸ் மாநிலத்தின் 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மலாய் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.

பெர்லிஸ் மாநிலத்திற்குச் சட்டமன்றத் தேர்தலும் ஒருசேர நடைபெறுவதால் சட்டமன்றத் தொகுதிகளிலும் – பெஜூவாங் கட்சியும் போட்டியிடுவதால் – மும்முனை அல்லது நான்கு முனைப் போட்டிகள் ஏற்பட்டிருக்கின்றன.

மும்முனைப் போட்டியில் ஆராவ்

பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் ஃபாதின் அமிலினா

சிறிய மாநிலமான பெர்லிஸில் இப்போது அனைத்துப் பார்வையும் ஆராவ் தொகுதியின் மீதுதான்.

இங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஃபாதின் அமிலினா, தேசிய முன்னணி சார்பில் ரோசாபில் தோக் பென் இருவரும் ஷஹிடானை எதிர்த்து நிற்கின்றனர்.

கடந்த பொதுத்தேர்தலில் இங்கு போட்டியிட்ட பாஸ் கட்சி 11,362 வாக்குகளும் பெர்சத்து வேட்பாளர் 11,691 வாக்குகளும் பெற்றனர். ஷஹிடான் வெற்றிபெற்றாலும் 16,547 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதன்படி பெர்சத்து – பாஸ் வேட்பாளர்கள் இருவரும் இணைந்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றனர்.

அதாவது ஷஹிடானுக்கு எதிராக – அவருக்குக் கிடைத்த வாக்குகளை விட – சுமார் 7,000 வாக்குகள் கூடுதலாக இத்தொகுதியில் விழுந்திருக்கின்றன. இந்த முறை பாஸ் – பெர்சத்து இரண்டு கட்சிகளும் இணைந்து பெரிக்காத்தான் வேட்பாளராக ஷஹிடானை களத்தில் நிறுத்தியிருக்கின்றன. ஏற்கெனவே பல தவணைகளில் இத்தொகுதியை வென்ற அனுபவத்தைக் கொண்டு ஷஹிடான் மீண்டும் வெல்லக்கூடும் என்பதுதான் இப்போதைய கள நிலவரம்.

2018 கணக்கெடுப்பின்படி 88 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும் 8 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும்  2 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களையும் 3 விழுக்காட்டு மற்ற இன வாக்காளர்களையும் கொண்டது இந்தத் தொகுதி.

இந்த முறை இந்தத் தொகுதியின் பதிவுபெற்ற வாக்காளர்கள் 60,876.

அம்னோவின் வேட்பாளர் தேர்வு குறித்தும் – சாஹிட் ஹாமிடி குறித்தும் – கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார் ஷஹிடான். அவர் மீண்டும் ஆராவ் தொகுதியில் வெற்றி பெற்றால் சாஹிட் ஹமிடியின் தலைமைத்துவத்திற்கு ஏற்படப் போகும் இன்னொரு பின்னடைவாக அந்த வெற்றி அமையும்.

தனது முயற்சியில் ஷஹிடான் தோல்வியடைந்தால், 70 வயதைக் கடந்து விட்ட அவரின் அரசியல் வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வரும்.

– இரா.முத்தரசன்