புத்ராஜெயா: 2019-ஆம் ஆண்டின் புள்ளிவிவர நடைமுறையை அடிப்படையாகக் கொண்ட புதிய வறுமைக் கோடு விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் தெரிவித்தார்.
மலேசியாவில் வறுமை குறித்த உண்மையான புள்ளிவிவரங்களைப் பெற புள்ளிவிவரத் துறை, வீட்டு வருமானம் மற்றும் செலவினங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 2019 ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியதாக அவர் கூறினார்.
“இந்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ய பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இரண்டு முறை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.” என்று அவர் இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் 2020 மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
980 ரிங்கிட்டுக்கும் குறைந்த வருமானத்தை அளவுகோலாகக் கருத்தில் கொண்டு, 2016-இல் மலேசியாவின் வறுமை விகிதம் 0.4 விழுக்காடாக இருந்தது என்று ஐநா மன்றம் கூறியது.
அக்டோபர் 2018- இல் அப்போதைய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் 11- வது மலேசியா திட்டத்தின் இடைக்கால மதிப்பீட்டின் போது வறுமைக் கோடு புள்ளிவிவரங்களை மறுஆய்வு செய்வதற்கான முடிவு உண்மையில் சில காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்று முஸ்தபா கூறினார்.
2005 முறையின் அடிப்படையில் குடும்பங்களுக்கான 980 ரிங்கிட் வருமானம் இனி பொருந்தாது என்பதை ஒப்புக் கொண்ட முஸ்தபா, புதிய வறுமைக் கோடு திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட வறுமை விகிதம் நிச்சயமாக அதிகமாக இருக்கும் என்பதற்கான அறிகுறியைக் கொடுத்தார்.
“2005- ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 20,000 ரிங்கிட்டாக இருந்தது, ஆனால் இப்போது அது 45,000 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இதன் பொருள் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. எனவே, வறுமைக் கோடு 980 ரிங்கிட்டில் இருக்கும் என்பது சாத்தியமில்லை.” என்று அவர் கூறினார்.