Home Featured நாடு மீண்டும் பெர்னாமா தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகள்!

மீண்டும் பெர்னாமா தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகள்!

1057
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 2015 முதல் நிறுத்தப்பட்டிருந்த பெர்னாமா தொலைக்காட்சியின் தமிழ் செய்திகள் மீண்டும் உலா வரவிருக்கின்றன. பெர்னாமாவின் தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமையாளரான பெர்னாமா நியூஸ் சேனல் நிறுவனமும் ‘பி’ சேனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனமும் (B Chanel Sdn Bhd) இணைந்து மீண்டும் பெர்னாமா தமிழ் செய்திகளை ஒளிபரப்பவிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் மாலை 7.00 மணி முதல் 7.30 மணிவரை அரை மணி நேரத்திற்கு இந்த செய்திகள் ‘பெர்னாமா செய்திகள்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகும்.

bernama tamil news-mou-25052017பெர்னாமா செய்திகளுக்கான புரிந்துணர்வு அமைச்சர் சைட் கெருவாக் முன்னிலையில் ஒப்பந்தம் – இடது கோடியில் இருப்பவர் பி சேனல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிவமணி சுப்ரமணியம்

#TamilSchoolmychoice

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கும் இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றில் தொடர்பு, பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் முன்னிலையில் நடைபெற்றது.

பெர்னாமா பொது நிர்வாகி டத்தோ சுல்கிப்ளி சாலே மற்றும் பி சேனல் நிறுனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிவமணி சுப்ரமணியம் இருவரும் பெர்னாமா செய்திகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர்.

தினசரி செய்திகளுடன், வாரம் ஒருமுறை ஒரு மணிநேர தமிழ் செய்தி-தகவல் நிகழ்ச்சி ஒன்றும் பின்னர் முடிவு செய்யப்படும் தேதியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் அஸ்ட்ரோ 502 தொலைக்காட்சி அலைவரிசையிலும் ஹைப் டிவி 410 (Hypp TV 410), மைடிவி 121 (MYTV 121), என்ஜாய் (enjoi), ஆகிய அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும்.

மேலும் www.bernama.com என்ற பெர்னாமா நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத் தளத்தின் வழி உலகம் எங்கும் உள்ளவர்கள் கண்டு இரசிக்கும் வண்ணம் இணையம் வழியும் ஒளிபரப்பப்படும்.

பெர்னாமா செய்திகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பெர்னாமா செய்திகளின் ஒளிபரப்பு தொடங்கும் என்றும் இன்றைய நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.