Home கலை உலகம் ‘அழல்’ திரைப்பட இசை வெளியீடு – டாக்டர் சுப்ரா கலந்து கொள்கிறார்!

‘அழல்’ திரைப்பட இசை வெளியீடு – டாக்டர் சுப்ரா கலந்து கொள்கிறார்!

1287
0
SHARE
Ad

Azhalகோலாலம்பூர் – மலேசியா – சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் ‘அழல்’ என்ற புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று ஆகஸ்ட் 2-ஆம் தேதி, புதன்கிழமை இரவு 8 மணியளவில், ஜிஎஸ்சி என்யு செண்ட்ரல் அரங்கில், மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியம் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.

மேலும், மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜா, மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டி, மஇகா தலைமைப் பொருளாளரும், தமிழ்நேசன் நாளிதழின் நிர்வாகியுமான டத்தோஸ்ரீ ச.வேள்பாரி, டத்தோ சந்திரகுமரன் ஆகியோரோடு, மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணிக் கலைஞர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

வி.ஜே.ரெக்கார்ட்ஸ் செண்ட்ரியான் பெர்ஹாட், மேஜிக் சில்வர்ட்ரீ புரோடக்சன்ஸ் என்ற நிறுவனங்களின் சார்பில் மலேசியா, சிங்கப்பூர் கலைஞர்களான விஜய் எமெர்ஜென்சி, ஆதித்யன் மேகனாதன் மற்றும் ரூபராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும், ‘அழல்’ திரைப்படத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த சரவணன் இயக்கியிருக்கிறார்.

‘அழல்’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். பெயருக்கு ஏற்ற வகையில் இத்திரைப்படத்தில் சிங்கப்பூர் கலைஞரான அரவிந்த் நாயுடு மிரட்டலான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

அவரோடு, டத்தோ ஷாஷா ஸ்ரீ, யாஷினி தேவி, ஹேடான் ரோய், ‘கீதையின் ராதை’ புகழ் ஜிகிராக் கர்ணன், அஜய் ராம்குமார், ஜிதென்ராம் கிரண் பாலா, செண்பகன் சன்னாசி, எம்ஜி விஜய், ஷான் சத்தியசீலன் உள்ளிட்ட பிரபலக் கலைஞர்களும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

அத்துடன் இத்திரைப்படத்தில் சிங்கப்பூர், மலேசியா என இரு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பணியாற்றியிருக்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளும் சிங்கப்பூர், மலேசியாவிலேயே படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

இசை மற்றும் பாடல்கள்

‘அழல்’ திரைப்படத்தில் இன்றைய இளைஞர்களை மிகவும் கவரும் வகையில் பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ரூபேஸ் இராதாகிருஷ்ணன் இசையில், ஃபீனிக்ஸ்தாசன் வரிகள் எழுதியிருக்கும் அப்பாடல்களை
திலீப் வர்மன், சைக்கோ மந்த்ரா, எபி, லினீத் ராஜ், ஸ்ரீவித்யா, ரூபேஸ், ஷாரோன் ஷோபனா வாசுதேவன், பவித்ரா, ஷான் சத்யசீலன் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

அண்மையில், ‘அழல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நிரஞ்சனா’ என்ற பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இளைஞர்களிடத்தில் மிகுந்த வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

அதுமட்டுமின்றி, தயாரிப்பாளர் விஜய் எமர்ஜென்சி, சைக்கோ மந்த்ராவுடன் இணைந்து ‘பயமா’ என்ற பாடலைப் பாடியிருப்பதன் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு இசைத்துறையில் மறுபிரவேசம் செய்திருக்கிறார்.

மேலும், தரமான பாடல்களை உருவாக்கும் வகையில், ‘அழல்’ திரைப்படத்தில் வயலின், கித்தார், புல்லாங்குழல் உள்ளிட்ட வாத்தியங்கள் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

‘அழல்’ திரைப்படம் குறித்த மேல் விவரங்களை கீழ்காணும் இணைப்பில் சென்று அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/azhalthefilm/