பாரிஸ் – பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படுபவரும், மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டவருமான ரசாக் பகிண்டா (படம்) ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் மலேசியாவுக்கு வாங்கப்பட்ட வழக்கில் பிரான்சில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக அனைத்துல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
2002-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கென வாங்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் விவகாரத்தில் ஊழல் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையும் பின்னர் இந்த விவகாரம் ‘ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் விவகாரம்’ என விஸ்வரூபமெடுத்ததையும் மலேசிய அரசியல் பார்வையாளர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.
இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அந்தக் கால கட்டத்தில், 2002 முதல் 2008 வரை தற்காப்பு அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் நஜிப்புக்கு நெருக்கமானவராகவும், அவரது அணுக்கமான ஆலோசகர்களில் ஒருவராகவும் ரசாக் பகிண்டா திகழ்ந்தார்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் குறித்து பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, 4 பிரான்ஸ் நாட்டு, தற்காப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
ஏறத்தாழ 114 மில்லியன் பவுண்ட் தொகை மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டு பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த மலேசிய நிறுவனத்தின் உரிமையாளராக ரசாக் பகிண்டாவின் மனைவி இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு விவகாரத்தைத் தொடர்ந்து இதில் மொழி பெயர்ப்பாளராகச் சம்பந்தப்பட்டிருந்த மங்கோலிய அழகியும், ரசாக் பகிண்டாவின் காதலியாகக் கருதப்பட்டவருமான அல்தான்துன்யா வெடிகுண்டுகள் மூலம் உடல் சிதறி கொல்லப்பட்டார்.
அல்தான்துன்யா கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ரசாக் பகிண்டா, பின்னர் போதுமான ஆதராங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை எதிர்த்து, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மேல்முறையீடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசாக் பகிண்டா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பிரான்ஸ் நாட்டில் கொண்டு வரப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ஏற்கனவே 1எம்டிபி விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சந்தித்து வரும் பிரதமர் நஜிப் மீதான அரசியல் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.