Home நாடு நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் விவகாரம் தூசி தட்டப்பட்டு – மீண்டும் திறக்கப்படுகிறது!

நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் விவகாரம் தூசி தட்டப்பட்டு – மீண்டும் திறக்கப்படுகிறது!

906
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு காலத்தில் நாட்டை உலுக்கிய ஊழல்களில் ஒன்று நஜிப் துன் ரசாக் தற்காப்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஸ்கோர்ப்பின் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து, 2002-ஆம் ஆண்டு வாக்கில் வாங்கப்பட்ட விவகாரம்.

அந்த விவகாரத்தில்தான் நஜிப்பின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் அப்துல் ரசாக் பகிண்டா இடைத் தரகராகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து பின்னர் பகிண்டா ரசாக்கும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

அந்த விவகாரம்தான் பின்னர் இன்னொரு கோணத்தில் நீண்டு, மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்காக விரிவடைந்தது.

#TamilSchoolmychoice

இப்போது ஸ்கோர்ப்பின் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் தூசி தட்டப்பட்டு மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் இதற்கான கோப்புகள் மறு விசாரணைக்காகத் திறக்கப்பட்டிருக்கின்றன.

அதற்காகத்தான் நஜிப் துன் ராக்கும் வாக்குமூலம் வழங்க இன்று புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கடந்த காலங்களில் இது தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்த போதெல்லாம் நஜிப் அதனை மறுத்தே வந்திருக்கிறார்.

தற்போது இந்த விவகாரத்தின் மூலம், அப்துல் ரசாக் பகிண்டா விவகாரம், அல்தான்துன்யா கொலை செய்யப்பட்டதன் பின்னணி, ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் அல்தான்துன்யா கொலைக் குற்றவாளி சைருலின் உண்மையான வாக்குமூலம் என்ன – என்பது பல பரபரப்பான – இதுவரை மர்மமான முறையில் மூடப்பட்டிருந்த இரகசியங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.