சென்னை,ஜன.17 இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று திரைத்துறையில் பல பரிணாமங்களை எடுத்த சேரன், தற்போது எழுத்துலகத்திலும் ஒரு புதிய பரிணாமத்தை எடுத்திருக்கிறார்.
‘சேரன் புத்தகம்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் சேரன், தனது நிறுவனத்தின் மூலம் ஈழப்போரையும், அதன் வலியையும் சொல்லும் ‘போரும் வலியும்’ என்கிற புத்தகத்தை முதல் வெளியீட்டாக வெளியிட்டிருக்கிறார்.
‘சேரன் நூலகம்’ என்ற நிறுவனம் உருவாக காரணம் என்ன என்பதை கூறிய சேரன், “எறிகணைச் சிதறலில் ஒரு பக்க முலையை இழந்த ஈழத்துத் தமிழ்த்தாய், பசியோடு அழும் தன் பச்சிளங்குழந்தைக்கு தன் இன்னொரு பக்க முலையில் பாலூட்டுகிறாள். குழந்தை பசியாறும் வரைக் காத்திருந்த காலன், பின் அவள் உயிர்பறித்துச் செல்கிறான். என்ன ஒரு “இரக்க” சிந்தனை காலனுக்கு.! மனித குலம் இதுவரை கண்டிராத பேரழிவாக, 30 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருந்த ஈழப்போரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும்… தடைசெய்யப்பட்ட ஆயுதங்களுடன் துரோகம் என்னும் அதிபயங்கர ஆயுதமும் சேர்ந்துகொண்டு ஈழத்தமிழர்களைச் சின்னாபின்னமாக்கிய அந்த தருணங்களுக்குச் சாட்சிகள் இருக்கின்றனவா..? இருக்கின்றன, பல்லாயிரக்கணக்கான கண்கள். அதிலிரண்டு கண்களுக்குச் சொந்தக் காரரான சாவித்திரி அத்துவிதானந்தன், தன் கண்களால் காட்சிப் படுத்தியவற்றைப் ‘போரும் வலியும்’ என்கிற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.”
“அந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதுவதற்காகத் தான் என்னை அணுகினார். நான்கைந்து நிமிடங்களில் முடிந்து விடக்கூடிய சந்திப்பாகத் தான் நான் அதை நினைத்திருந்தேன்…ஆனால் நான்கைந்து மணி நேரமாக நீண்டு விட்ட அந்த சந்திப்பில் ஈழப்போரைப் பற்றியும் அதன் வடுக்களைப் பற்றியும் கொத்துகொத்தாய் செத்து மடிந்த நம் உறவுகளைப் பற்றியும் அவர் சொல்ல சொல்ல தாரை தாரையாக எனக்குக் கண்ணீர் வந்து விட்டது. அவர் சொன்ன எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி அவரது போரும் வலியும் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்… மனிதாபிமானங்களையும், நாகரீகம், தத்துவம் , செயல் என்று எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டு யுத்தம் ரத்தக்கறை படிந்த தன் கோரப்பற்களால் சிரித்துக் கொண்டிருக்கிறது…”
“இனஅழிப்பை சிங்கள அரசாங்கம் எப்படி நிகழ்த்தியது என்பதை அந்த பகுதியில் போர்க்காலங்களில் வாழ்ந்த 67 வயது ஈழத்தமிழ்த்தாய் சாவித்திரி அத்விதானந்தன் பதிவு செய்திருக்கிறார்… அதைப்படித்ததும் நாமே வெளியிட்டு இதை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என என் மனதுக்கு தோன்றியது…” என்றும் சேரன் கூறினார்.
டெல்லிப்பெண்ணும் என் சகோதரிதான் என்று போராட்டக்களத்தில் குதிக்கும் தமிழனின் சகோதரிகளைக் காப்பாற்ற அன்று யாரும் வரவில்லையே என்கிற ஆதங்கம் என் தொண்டையை அடைக்கிறது.
ஒரு தனிமனிதனாக நானும் கொஞ்சம் சொரணையோடுதான் இருக்கிறேன் என்பதற்காகவே சேரன் நூலகம் என்கிற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் முதல் வெளியீடாக சாவித்திரி அத்துவிதானந்தன் எழுதியிருக்கும் இந்தப் ‘போரும் வலியும்’ புத்தகத்தை வெளியிட்டிருக்கிறேன்…
தொடர்ந்து சேரன் நூலகம் மூலம் சிறந்த புத்தகங்களை வெளியிடயிருக்கிறேன்… உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் இணையத்தில் படித்து அறிந்து கொள்ளும் பொருட்டு சேரன் நூலகத்தின் படைப்புகள் இணையத்திலும் பதிவேற்றப்படவிருக்கின்றன.” என்றார் சேரன்.
சேரன் நூலகம் வெளியிட்டிருக்கும் சாவித்திரி அத்துவிதானந்தன் எழுதிய 216 பக்கங்களைக்கொண்ட ‘போரும் வலியும்’ புத்தகம், சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 11, 2013 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 36 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம், தமிழ்க்குளம் பதிப்பகம், பாதை நூலகம் மற்றும் தாய்மடித் தமிழ்ச்சங்கம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.
சென்னைப் புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 23 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகங்கள் தேவைப்படும் வாசகர்கள், சேரன் நூலகம்,9 A, சிவசைலம் தெரு,தியாகராய நகர், சென்னை -17 என்கிற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண் 044 28343737 மின்னஞ்சல் : cherannoolagam@gmail.com.