சென்னை, மார்ச் 26- இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் சிங்களத்தில் விளம்பரம் அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன.
சர்ச்சைக்கும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது போல அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பின்னர் அந்த நிறுவனம் மீள்கிறது.
இப்போது தமிழர்களுக்கு எதிரான பிரச்சனையில் சிக்கியுள்ளது.
இந்த கடைகளில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கும் சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருட்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களின் வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது.
தமிழில் கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம்.