காத்மாண்டு – நேபாளத் தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் அருகே இன்று திங்கட்கிழமை மதியம் வங்காளதேச விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்தது.
விமானத்தில் இருந்த 67 பயணிகள், 4 பணியாளர்களில், இதுவரையில் 50 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக நேபாள மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2.20 மணியளவில், அவ்விமானம் தரையிறங்க முயற்சி செய்த போது ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, அருகில் இருந்த காற்பந்தாட்ட மைதானத்தில் விழுந்து நொறுங்கியதாக விமான நிலைய அறிக்கை கூறுகின்றது.
விழுந்த விமானம் உடனடியாக தீப்பற்றிக் கொண்டதால் பலர் மரணம் அடைந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. சிலர் எரியும் விமானத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர். எனினும் இன்னும் 9 பேர் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.