Home நாடு நினைவலைகள் : “பத்திரிக்கையுலக பீஷ்மர்” – சை.பீர் முகம்மது புகழ் அஞ்சலி!

நினைவலைகள் : “பத்திரிக்கையுலக பீஷ்மர்” – சை.பீர் முகம்மது புகழ் அஞ்சலி!

1129
0
SHARE
Ad

கோலாலம்பூர்- (கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலமான நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் அவர்களுடன் நீண்ட காலம் பழகிய மற்றொரு மூத்த எழுத்தாளர் சை.பீர் முகம்மது, அன்னாருடனான தனது பழைய அனுபவங்களை சமூக ஊடகங்களின் வழி வெளியிட்டிருக்கிறார். அதனை செல்லியலில் பதிவேற்றம் செய்கிறோம்)

“எம்.துரைராஜ் என் முதல் கதையை தமிழ் நேசனில் அவரே வெளியிட்டார். 1962-இல் தமிழ்நேசன் அலுவலகத்திற்கு மேலிருந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அலுவலகத்தில் மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைந்த பொழுது அவரே செயற்குழுவிற்கு என்னை முன் மொழிந்தார்.

எழுபதுகளில் நான் செயலாளர் பொறுப்புக்கு வந்த பொழுது அமரர் முருகு சுப்பிரமணியம் தலைவர். அதன் பிறகு எங்களுக்குள் போராட்டம் தான். நான் மாதாந்திர சிறுகதைக் கருத்தரங்கை எழுத்தாளர் சங்கத்தில் ஆரம்பித்த பொழுது எங்கள் இருவருக்கும் இடையில் 3-ஆம் உலகப்போர் நடக்கும். வெட்டிக்க குத்திக்க மட்டுமே நடக்கவில்லை. அதில் உணவுக்கு அமரும் பொழுது நான் அமர்ந்திருக்கும் இடம் வந்து அமர்வார். கருத்தரங்கின் ‘சண்டை’ கொஞ்சம் கூட இல்லாமல் மிக அன்போடு உரையாடுவார். நான் மனம் நொந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். பிறகு அவர் தலைவராகவும் நான் செயலாளராகவும் எழுத்தாளர் சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் கணக்கில்லா நிகழ்வுகள்! நினைவுகள்!

சை.பீர் முகம்மது
#TamilSchoolmychoice

வங்கிகளில் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்களில் பலமணி நேரங்கள் இலக்கியம் பற்றி உரையாடல் தொடரும். மிக அண்மைக்காலமாக நிச்சயமாக மாதமொருமுறை தொலைபேசியில் அழைத்து நீண்ட உரையாடல். “உங்கள் பேட்டரி வீக்காகாமல் (Battery weak) பார்த்துகொள்ளுங்கள் பீர். அதற்காகத்தான் போன் போடுகிறேன். விடாது எழுதுங்கள். அன்புச்செல்வன், சந்திரகாந்தம் போய்விட்டார்கள். 61 வருஷமாக நீங்களும் நானுமே இருக்கிறோம். விடாதீர்கள் . இந்த நாட்டு தமிழ் எழுத்துக்கு ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும்” என்பார் துரைராஜ்.

அவரும் பினாங்கு சிறுகதைப்பித்தனும் (நக்கம்பாடி கரீம்) இணைந்து புதுமைப்பித்தன் நினைவு மலர் வெளியிட்டார்கள். 1958-ஆம் ஆண்டு. மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றில் அது ஒரு பெரும் சாதனை. புதுமைப்பித்தன் நினைவுமலர் தன்னிடம் இல்லையென்று மிக சோகத்தோடு கூறினார். என்னிடமும் அது இல்லை. பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டேன். சிரம்பான் எழுத்தாளர் ‘சின்ன ரூனா ‘ ஒரு நகல் காப்பியை அனுப்பி உதவினார். மற்றொரு நகலெடுத்து துரைராஜிடம் கொடுத்தேன்.

அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சி இன்றும் என் நினைவில் நிற்கிறது. நக்கம்பாடி கரீம், தான் வெளியிடும் நூல்களில் அச்சாகும் தேதி வருடங்களை குறிக்க மறந்துவிடுவார்.
இலண்டன் நூற்காட்சிக்காகவும் நூல் நிலையத்துக்காகவும் எனது நூலகத்தில் மலேசிய நூல்களைத் திரட்டிய பொழுது, நக்கம்பாடி கரீமின் “நபி புகழ் மாலை “நூலில் ஆண்டு இல்லை.அது போலவே புதுமைப்பித்தன் நினைவு மலரிலும் வெளியீட்டு ஆண்டு இல்லை.இதை துரைராஜிடம் சுட்டிய பொழுது தலையில் அடித்துக்கொண்டார். “பாருங்க பீர் எவ்வளவு பெரிய தவறு நடந்துவிட்டது” என மிகவும் வருத்தப்பட்டார்.

‘மலேசிய 50 ஆண்டுகள் வேரும் வாழ்வும்’ கதைகளைத் நான் தொகுத்த பொழுது புதுமைப்பித்தன் நினைவு மலரை ஒட்டி சிறுகதைப் போட்டி ஒன்றை துரைராஜும் சிறுகதைப்பித்தனும் இணைந்து நடத்தினார்கள். முதல் பரிசை பினாங்கு ஏ.எஸ்.அந்தோணி முத்து பெற்றிருந்தார்.நேரில் பினாங்கு போய் அந்தோணி முத்துவைத் தேடிப் பிடித்து கேட்ட போழுது நான் கதை எழுதுவதையே மறந்துவிட்டேன். அது எந்த குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோவென்று சோகத்துடன் கூறினார்.

100 கதைகள் என் நோக்கமாகவே ‘வேரும் வாழ்வும்’ பணியை ஆரம்பித்தேன். மனதில் நினைத்திருந்த 7 பேரின் கதைகள் கிடைக்காமல் 93 கதைகளோடு அத்தொகுப்பு உலகம் எங்கும் சென்றது. துரைராஜிடம் இதை கூறிய பொழுது மிக வருத்தப்பட்டார். இதில் சோகம் என்னவென்றால் புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகள் எதுவும் அந்த நினைவு மலரில் இடம்பெறவில்லை.தமிழ்நேசனில் வாரந்தோறும் கதைகள் வந்தன. ஏ.எஸ். அந்தோணிமுத்து முதல் பரிசும் மூன்றாவது பரிசு வெ.விவேகானந்தனும் பெற்றிருந்தார்கள். இரண்டாவது தெரியவில்லை.

அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் என் நினைவில் அக்கதைக் கரு அப்படியே நினைவில் நிற்கின்றது. மலேசிய சிறுகதைகள் வேகமெடுக்க துரைராஜு அவர்களின் பங்களிப்பு அது.

கண்ணுக்குத் தெரியும் திறமையாளர்களை தட்டிக் கொடுத்து எழுத வைத்தவர்.

மு.பக்குருதீன், ப.சந்திரகாந்தம் இருவரையும் அடையாளம் கண்டு ஊக்குவித்தார். இருவரும் இணைந்து பல புது முயற்சிகள் செய்யக் காரணமாக இருந்தார்.

முதன் முதலாக வானில் பரீட்சார்த்தமாகப் பறந்து நிலவில் காலடி வைக்க வழிகாட்டியவர்கள் அண்ட வெளியிலிருந்து பூமிக்குப் பேசியதை தமிம் நேசன் முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தது. தலைப்பு கொட்டை எழுத்தில். அந்தக் கம்பி இல்லா தொலைபேசியில் பூமியிலிருந்து ரஷ்ய அதிபர் அழைக்கிறார். தமிழ்நேசனில் அந்த முதல் பக்கச் செய்தி “ஹலோ ஹலோ சுகமா? ஆமாம் நீங்கள் நலமா? ” – அப்பொழுது எங்கும் ஒலித்த பாடலையே தலைப்புச் செய்தியாகப் போட்டு இன்றுவரை நினைவில் நிலைக்க வைத்துவிட்டார்.

துரைராஜ் ஒரு பத்திரிகையுலக பீஷ்மர்.

-சை.பீர்முகம்மது