கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடக்கி வைத்த ஒரு புதிய நடைமுறை தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத்தின் சார்பில் வழக்காட தனியார் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவை நியமித்த நடைமுறைதான் அது!
இத்தகைய நடைமுறைக்கு சட்டத்தில் ஏற்கனவே இடமிருந்தாலும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் அன்வார் வழக்கில்தான் இந்த நடைமுறையைப் பயன்படுத்தினார் நஜிப்.
ஷாபி அப்துல்லாவுக்கு இதற்காக 9 மில்லியன் வழக்கறிஞர் கட்டணம் செலுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை இன்னொரு தனிக் கதை!
தேவைப்பட்டால் அரசாங்கத்தின் சார்பில் வழக்காட தனியார் வழக்கறிஞரை, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமித்துக் கொள்ளலாம் என மலேசிய சட்டம் கூறுகிறது.
தற்போது 1எம்டிபி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அரசாங்க வழக்கறிஞராக வழக்காட, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த, முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியும், நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவருமான கோபால் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த வழக்குகளைக் கையாள முன்வந்திருக்கும் கோபால் ஸ்ரீராம் நாட்டுக்கான சேவை அடிப்படையில்தான் வழக்காடவிருக்கிறார் என்றும் அவர் இந்த வழக்குகளுக்காக எந்தவித கட்டணத்தையும் விதிக்கவில்லை என்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அறிவித்திருக்கிறார்.
1எம்டிபி தொடர்பான வழக்குகளில் புதைந்திருக்கும் சட்ட நுணுக்கங்கள், அதற்கெனத் தேவைப்படும் சட்ட அறிவாற்றல், நடப்பு அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் மற்ற வழக்கறிஞர்களுக்கு இருக்கும் வேலைப்பளு, ஆகிய காரணங்களுக்காக 1எம்டிபி தொடர்பான வழக்குகளைக் கையாள ஸ்ரீராம் போன்ற சட்ட அறிஞர்களின் துணை தேவைப்படுவதாகவும் டோமி தோமஸ் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.