கோலாலம்பூர் – மலேசிய அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டு விவகாரங்களைத் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வரும் சரவாக் ரிப்போர்ட் என்ற இணையத் தளம், பிரதமர் நஜிப்பிடம் இருந்து வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா (படம்) 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
11 செப்டம்பர் 2013 தேதியிலும், 17 பிப்ரவரி 2014 தேதியிலும் இரண்டு கட்டங்களாக இந்தத் தொகையை ஷாபி நஜிப்பிடம் இருந்து பெற்றார் என சரவாக் ரிப்போர்ட் குற்றம் சாட்டியிருக்கிறது.
அன்வார் மீதான ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு வழக்கை அரசாங்க வழக்கறிஞராக முன்னின்று நடத்தியவர் ஷாபி அப்துல்லா என்பதால், இந்தப் பணப் பரிமாற்றங்கள் அரசியல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து அடுத்த என்ன நடவடிக்கை என்பது குறித்து தற்போது சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அடுத்த வாரம் சந்தித்து ஆலோசிக்கப் போவதாக அவரது வழக்கறிஞர் சுரேந்திரன் அறிவித்திருக்கின்றார் என மலேசியாகினி இணையத் தளம் தெரிவித்தது.
இந்தப் புதிய தகவல்கள் குறித்து காவல் துறை விசாரிக்க வேண்டும் என பிகேஆர் கட்சி சார்பில் காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதன் மூலம் அன்வார் வழக்கில் புதிய திருப்பங்கள் ஏதும் ஏற்படுமா என்ற ஆர்வமும் அரசியல் பார்வையாளர்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
இருப்பினும், அப்படியே நஜிப் மூலம் ஷாபி பணம் பெற்றிருந்தாலும் அதனால் அன்வார் மீதான வழக்கின் முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பணம் கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே வழக்கின் முடிவுகள் மாறுவதற்கோ, மறு விசாரணை நடத்துவதற்கோ வாய்ப்புகள் உண்டு எனவும், ஷாபி பணம் பெற்றதால் வழக்கின் முடிவு மாறிவிடாது என்றும் நஸ்ரி தெரிவித்திருக்கின்றார்.