Home Featured தமிழ் நாடு அப்துல் ரகுமான்: “அம்மி கொத்த” முன்வராத கவிதைச் சிற்பி!

அப்துல் ரகுமான்: “அம்மி கொத்த” முன்வராத கவிதைச் சிற்பி!

3953
0
SHARE
Ad

kaviko-abdul-ragman

(நேற்று வெள்ளிக்கிழமை, ஜூன் 2-ஆம் தேதி அதிகாலை காலமான கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகள் சிலவற்றை தனது பார்வையில் நினைவு கூர்கிறார் செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

தனது 80-வது வயதில், தனது எண்ணற்ற கவிதைகளால் தமிழ் மொழியையும், புதுக் கவிதை இலக்கியத்தையும் செழுமைப் படுத்திவிட்டு, செதுக்கி விட்டு நேற்று வெள்ளிக்கிழமை (2 ஜூன் 2017) இந்தப் பூவுலகிலிருந்து பிரிந்திருக்கும், கவிக்கோ அப்துல் ரகுமான், தனது புதுமையான கவிதை வரிகளாலும், அதில் புதைந்திருந்த எண்ணற்ற உவமைகளாலும் பலரையும் கவர்ந்தவர்.

#TamilSchoolmychoice

திரைப்படப் பாடல் எழுதுவதற்கு அவர் பல முறை அழைக்கப்பட்டும் முன்வரவில்லை. அதற்குக் காரணமும் கூறினார்: “அம்மி கொத்துவதற்கு சிற்பி எதற்கு?”

இறுதிவரை அந்தக் கொள்கைப் பிடிப்போடு பணம், புகழ் போன்ற மோகங்களுக்குள் சிக்காமல் கவிதைச் சிற்பியாகவே வாழ்ந்த அப்துல் ரகுமான் வடித்த சிற்பக் கவிதை வரிகள் சிலவற்றைப் பார்ப்போமா?

பேரறிஞர் அண்ணா

Annathurai Ex CM 300 x 200

அரசியல் ஈடுபாடு கொள்ளாவிட்டாலும், திராவிடத் தலைவர்களைப் போற்றிய கவிக்கோ, பேரறிஞர் அண்ணா குறித்து வடித்த கீழ்க்காணும் வரிகள் புகழ் பெற்றவை:

அண்ணா!

அழுகின்றபோதும்

மேகம் போல் அழுதவன் நீ!

விழுகின்றபோதும்

விதையைப்போல் விழுந்தவன் நீ!

…..

உன் எழுதுகோல்

தலை குனியும்போதெல்லாம்

தமிழ் தலை நிமிர்ந்தது.

அண்ணாவின் மரணம் அப்துல் ரகுமானின் கவிதை உள்ளத்திலிருந்து கொந்தளித்துக் கிளறிவிட்ட உவமைகளைப் பாருங்கள்:

அன்று இறந்ததோ நாம்;

புதைத்ததோ உன்னை!

நம்மைப்போல்

பைத்தியக்காரர்கள் யார்?

உடல்களைப் புதைக்கும்

உலகத்தில்

அன்று நாம் ஓர்

உயிரைப் புதைத்தோம்!

கடற்கரையில் பேசுவாய்

கடலலையில் மீனாவோம்

கடற்கறையில் தூங்கிவிட்டாய்

கடற்கரையில் மீனானோம்.

இங்கே புதைக்கப்பட்டது

பெறும் மனித உடலல்ல;

எங்கள்

வரலாற்றுப் பேழை.

நீ மண்ணுக்குள் சென்றாலும்

வேராகத்தான் சென்றாய்.

அதனால்தான்

எங்கள் கிளைகளில்

இன்னும் பூக்கள்

மலர்கின்றன.

அப்துல் ரகுமான் குறித்து கண்ணதாசன்…

Kannadasan

மறைந்த கவிஞர் கண்ணதாசனையும் தனது எழுத்துகளால் கவர்ந்தவர் அப்துல் ரகுமான். அவரைப் பற்றி கண்ணதாசன் வரைந்த வரிகள் இவை:

“நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் ‘தமிழில் இப்படி எழுத யாருமில்லையே’ என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ, அப்துல் ரகுமான் வந்து விட்டார். இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால், ‘யார் இந்தக் கவிஞன்?’ என்று உலகம் விசாரிக்கும்.”

கலைஞர் கருணாநிதி

karunanithi-kaviko abdul rahman

இன்று ஜூன் 3-ஆம் தேதி தனது 94-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கலைஞர் கருணாநிதி மீது பற்றும் அபிமானமும் கொண்டிருந்தவர் அப்துல் ரகுமான்.

உடல்நலத்தோடும், உயிரோடும் இருந்திருந்தால், கண்டிப்பாக கருணாநிதி குறித்த இன்னொரு கவிதைச் சிற்பத்தை கவிக்கோ இன்று வடித்திருப்பார்.

கலைஞரைப் பற்றி கவிக்கோ என்ன கூறியிருப்பார் என்பதைக் காண்பதற்கு முன்னால், அப்துல் ரகுமானைப் பற்றி கலைஞர் என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பார்ப்போமா?

இதோ படியுங்கள்:

வெற்றி பல கண்டு நான்

விருது பெற வரும்போது

வெகுமானம் என்ன

வேண்டும் எனக் கேட்டால்

அப்துல்

ரகுமானைத் தருகவென்பேன்

தனக்கு விருதாக – வெகுமானமாக ரகுமானையே கேட்பேன் என கலைஞர் கவிதை பாடுமளவுக்கு அவர் மனதில் இடம் பிடித்தவர் கவிக்கோ.

இனி கலைஞரைப் பற்றி கவிக்கோ தனது கவிதைகளால் எவ்வாறு மகுடம் சூட்டியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்:

என் கவிதை உனக்கு பூச்சொரியும்:
… ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.

முதுகு வலிக்கிறது உனக்கு..
வலிக்காதா…

எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.

ஒரு நாள்
தமிழிடம் முகவரி கேட்டேன் –
அது மே/பா மு.கருணாநிதி என்றது.

சிலப்பதிகாரம்

தமிழின் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் என்ற பெருங் கதையை நான்கே வரிகளில் அப்துல் ரகுமான் எப்படி அடக்கியிருக்கிறார் என்பதைப் பாருங்கள்!

பால்நகையாள் வெண்முத்துப்

பல்நகையாள் கண்ணகிதன்

கால்ககையால் வாய்நகைபோய்

கழுத்துநகை இழந்தகதை

இராவணன் ஏன் சீதையைக் கவர்ந்தான்?

இராமாயண இதிகாசத்தில் இராவணன் கதாபாத்திரத்தை தனது கவிதை வரிகளால் கண்ணோட்டமிட்ட அப்துல் ரகுமான் இவ்வாறு கூறுகிறார்:

இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?

கவிஞர் அறிவுமதியின் ஆசான் அப்துல் ரகுமான்

arivumathi-poet

தமிழ்க் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்ட அறிவுமதியின் (படம்)  ஆசானாகத் திகழ்ந்தவர் அப்துல் ரகுமான். அவரது வீட்டில் நீண்ட காலம் தங்கி அவரிடம் தமிழும் கவிதையும் படித்ததாக அறிவுமதியே பல முறையே கூறியிருக்கிறார் – எழுதியிருக்கிறார்.

அப்துல் ரகுமானின் மேன்மை குணத்தைக் காட்டும் மற்றொரு சம்பவத்தையும் அறிவுமதி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்துல் ரகுமானை இன்னொரு அப்பாவாகவும், ஆசானாகவும் கருதி அவருடன் பல ஆண்டுகள் பழகியிருந்தாலும், அவரது இல்லத்தில் தங்கியிருந்தாலும், ஒருமுறை கூட இஸ்லாம் மதம் குறித்தோ அல்லது திருக்குரானைப் படியுங்கள் என்றோ ஒருமுறை கூட அவர் தன்னிடம் கூறியதில்லை என அறிவுமதியே கூறியிருக்கிறார்.

kavikko-abdul rahman

“இருந்தாலும் ஒருமுறை ஒரு நூலைக் கொடுத்து, அந்த நூலின் சில பக்கங்களைச் சுட்டிக் காட்டி, அந்தப் பக்கங்களைப் படித்துப் பார்! கவிதை நடையில், கவிதை மொழியில் இருக்கும்” என்று அறிவுமதியிடம் கூறியிருக்கிறார் அப்துல் ரகுமான்.

அந்த நூல் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள்!

மேன்மை மிக்க கவிதைகளைப் படைத்ததால் மட்டுமல்ல, வாழும் வாழ்க்கையாலும் மேன்மையானவராகத் திகழ்ந்தவர் அப்துல் ரகுமான் என்பதற்கு இந்த சம்பவமே சான்று!

அப்துல் ரகுமான் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

இனி அவரது கவிதைகளோடு வாழ்வோம்!

இதையேதான் அப்துல் ரகுமான் கவிதைகள் மீது காதல் கொண்ட நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படிக் கூறியிருக்கிறார்:

“அப்துல் ரஹ்மான் உயிராய்த்தான் மாண்டார். உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார். என் மூலம், எனக்கும் இரங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தே தீருவர்”

-இரா.முத்தரசன்