சென்னை – சினிமா டிக்கெட்டிற்கு மத்திய அரசு விதித்திருக்கும் 28 விழுக்காடு ஜிஎஸ்டி-யைக் குறைக்காவிட்டால், சினிமாவை விட்டே விலகிவிடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்,”சினிமா என்பது செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஓர் ஊடகம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சினிமா பார்த்து வருகின்றேன். நான் பேசக் கற்றுக்கொண்டதே சினிமாவில் தான். சினிமா என்பது சூதாட்டம் கிடையாது. அது ஒரு கலை”
“ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ஜிஎஸ்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இப்படி வரி விதித்து இந்திய சினிமாவை பாவப்பட்டியலில் சேர்த்து விடாதீர்கள். 28 விழுக்காடு வரியால் சினிமாவில் கறுப்புப் பணம் இன்னும் அதிகமாகவே புழங்கும். இவ்வரியை இந்தி திரைப்பட உலகம் ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் ஏற்கமாட்டோம். மத்திய அரசு வரியை 12 முதல் 18 விழுக்காடாகக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டே விலகுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கமல் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் கமலுடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எல்.சுரேஷ், அபிராமி இராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.