Home நாடு ஆதி.இராஜகுமாரன்: சில நினைவுகள்…சில அனுபவங்கள்..

ஆதி.இராஜகுமாரன்: சில நினைவுகள்…சில அனுபவங்கள்..

1130
0
SHARE
Ad

Rajakumaran Photo Feature(கடந்த 25 ஆகஸ்ட் 2018-ஆம் நாள் மறைந்த நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை நாளிதழ் நிறுவனத்தின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் குறித்த சில நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

ஓரிரண்டு சம்பவங்களை விவரிப்பதன் மூலம், ஆதி.இராஜகுமாரன் குறித்துப் பலரும் கூறியிருக்கும் அவரது சில வித்தியாச குணநலன்களையும், வாழ்க்கையில் அவர் கொண்டிருந்த அவருக்கே உரித்தான சில நடைமுறைகளையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை முதலாவது மாடியில் இருக்கும் அவரது நயனம் வார இதழ் அலுவலகத்திலிருந்து கீழே படிகளில் அவர் இறங்கிக் கொண்டிருந்தபோது எதிரே ஒரு நபர் எதிர்ப்படுகிறார். “சார்! நான் நயனம் வாசகன். இராஜகுமாரனைச் சந்திக்க வேண்டும்” என்கிறார் அந்நபர். “நீங்கள் மேலே போங்கள். உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் ஓர் அறை இருக்கும். அங்கு ஒருவர் அமர்ந்திருப்பார். அவரிடம் கேளுங்கள்” என்று கூறிவிட்டு சாவகாசமாக சென்றுவிட்டார் இராஜகுமாரன்.

#TamilSchoolmychoice

வந்த வாசகனுக்குத் தெரியாது, அவர்தான் இராஜகுமாரன் என்று! இன்னொரு எழுத்தாளராக, பத்திரிக்கை ஆசிரியனாக இருந்தால், அந்த நேரத்தில் புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள்,  தன்னையும் பார்க்க ஒரு வாசகன் வந்திருக்கிறானே என்று!

இன்னொரு முறை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இராஜகுமாரனோடு தனியாக பேசிக் கொண்டிருந்தபோது எனது நண்பர் ஒருவர் குறுக்கே வந்து என்னுடன் பேசத் தொடங்கினார். நானும் நாகரீகம் கருதி, தனித்து விடப்பட்ட இராஜகுமாரனைக் காட்டி அந்த நண்பரிடம் கூறினேன் “இவரைத் தெரிகிறதா? இவர்தான் இராஜகுமாரன். நயனம் இதழின் ஆசிரியர்” என்றேன். பேசிவிட்டு நண்பர் அந்த இடத்தை விட்டு அகன்றதும், இராஜகுமாரன் என்னைப் பார்த்துக் கூறினார் “என்னை வெறும் ராஜ் என்று அறிமுகப்படுத்துங்கள் போதும். வேறு எந்த அடைமொழியும், அடையாளமும் வேண்டாம். நான் யார் என்ற விவரங்களும் வேண்டாம்” என்றார்.

அதுதான் இராஜகுமாரன்!

உடல் நலம் குன்றியிருந்த அவரது இறுதி நாட்களிலும் அவரது குணநலன்கள் மாறவில்லை. “நான் எங்கு தங்கியிருக்கிறேன். எந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது போன்ற விவரங்களை யாருக்கும் எனது முன் அனுமதியில்லாமல் கண்டிப்பாகத் தெரிவிக்கக் கூடாது” என தனது குடும்பத்தினரிடத்திலும், நெருக்கமானவர்களிடத்திலும் அவர் கட்டளையாகக் கூறியிருந்தார்.

முதல் சந்திப்புகள்…

நயனம் குறிப்பிடத்தக்க ஒரு வார இதழாக, இலக்கியக் களமாக, வெளிவந்து கொண்டிருந்த போது அதற்கு நிருவாகியாக இருந்த எனது நண்பர், கோபி என்று அழைக்கப்படும், கோபாலகிருஷ்ணனைச் சந்திக்க அடிக்கடி அந்த அலுவலகம் செல்வேன். அப்போதுதான் இராஜகுமாரனோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. வானம்பாடி வார இதழில் அவர் பணிபுரிந்த காலம் தொட்டே அவரது எழுத்துக்களை நான் இரசித்துப் படித்திருக்கிறேன் என்பதோடு, அவரது எழுத்துப் பணிகளையும் நன்கு அறிந்திருந்தேன். அவ்வப்போது, இருவரும் அளவளாவுவோம். அந்த உரையாடல்களில் முக்கியமாக இலக்கியம் சார்ந்த அம்சங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.

பின்னர் நான், கோபி, அவர் என அவ்வப்போது ஒன்றாக உணவருந்தச் செல்லும் அளவுக்கு எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இருப்பினும் அவரது சகோதரர் ஆதி.குமணன் அவர்களின் மறைவுக்குப் பின்னர்தான் எங்களுக்குள் மேலும் நெருக்கமும் பிணைப்பும் ஏற்பட்டது.

அதற்கு சில காரணங்களும் இருந்தன.

மக்கள் ஓசை தொடங்கப்பட்ட சூழ்நிலை…

தொடக்கம் முதலே, மக்கள் ஓசை பத்திரிக்கையில் 50 விழுக்காடு பங்குகளை அதிகாரபூர்வமாக கொண்டிருந்தவர் இராஜகுமாரன். எஞ்சிய 50 விழுக்காடு பங்குகள் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் அவர்களின் சார்பில் இன்னொரு பெயரில் வைக்கப்பட்டிருந்தது. 28 மார்ச் 2005-இல் நிகழ்ந்த ஆதி.குமணனின் மரணம், அதைத் தொடர்ந்து அவர் ஆசிரியராக இருந்த மலேசிய நண்பன் பத்திரிக்கையின் உரிமம் கைமாறி அதன் உரிமையாளர்களிடமே சென்றது – ஆகிய சம்பவங்களால், அதுவரையில் வாரப் பத்திரிக்கையாக வெளிவந்து கொண்டிருந்த மக்கள் ஓசை பத்திரிக்கையை நாளிதழாகக் கொண்டுவரவேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் சுப்ராவுக்கு ஏற்பட்டது.

2004-ஆம் ஆண்டில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சுப்ராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், 2006-இல் மஇகா கட்சித் தேர்தலில் அவரைத் துணைத் தலைவர் பதவியில் டத்தோஸ்ரீ பழனிவேலுவைக் கொண்டு தோற்கடித்து விட கட்சித் தலைமைத்துவம் மும்முரமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருந்த 2005 காலகட்டத்தில்தான் ஆதி குமணன் மறைந்தார்.

இந்த சமயத்தில் தனது அரசியல் போராட்டத்திற்கென நாளிதழ் ஒன்றின் துணை வேண்டும் என்ற முடிவுடன் மக்கள் ஓசையைத் தொடக்க முனைந்தார் சுப்ரா.

அதே சமயம் சுப்ராவுக்கு உரிமையான 50 விழுக்காடு பங்குகளை அவர் பெறுவதிலும் அவருக்கு சில சட்டசிக்கல்கள் ஏற்பட்டன. இந்த கட்டத்தில்தான் தனது சக 50 விழுக்காடு பங்குதாரர் என்ற முறையில் இராஜகுமாரனின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது.

சுப்ராவுக்கும், இராஜகுமாரனுக்கும் நல்ல பழக்கம் இருந்தாலும், அவ்வளவான நெருக்கம் இருந்ததில்லை. அனைத்து நிறுவன, வணிக விவகாரங்களையும் ஆதி.குமணனும் சுப்ராவுமே நேரடியாகக் கவனித்துக் கொண்டதால், இராஜகுமாரனும், சுப்ராவும் அதுவரையில் இந்த விவகாரங்களுக்காக நேரடியாகச் சந்தித்துக் கொண்டதில்லை. எனவே, சுப்ராவுடன் எனக்கிருந்த நெருக்கம் காரணமாக, சில விவகாரங்கள் குறித்து எடுத்துச் சொல்ல இராஜகுமாரன் என்னை அணுகினார்.

அதே வேளையில், மக்கள் ஓசை குறித்த சில சிக்கலான விவகாரங்களை இராஜகுமாரனுக்கு எடுத்து விளக்கிச் சொல்ல சுப்ராவும் என்னை அணுகினார். இருவரிடத்திலும் நான் பெற்றிருந்த நம்பகத் தன்மையினால், மக்கள் ஓசை தொடங்கப்படுவதற்கு முன்னர் இருந்த சில நடைமுறைச் சிக்கல்கள் இருதரப்பிலும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டன.

சுப்ரா தனக்குரிய மக்கள் ஓசை பங்குகளை அதிகாரபூர்வமாக பெறுவதற்கு ஏற்பட்டிருந்த சட்டசிக்கல்களைத் தீர்ப்பதிலும், சம்பந்தப்பட்ட தரப்புகளோடு பேச்சு வார்த்தை நடத்துவதிலும் நான் துணைபுரிந்தேன்.

சுப்ரா தரப்பு, தனக்குரிய 50 விழுக்காடு மக்கள் ஓசை நிறுவனப் பங்குகளைத் திரும்பப் பெறுவதில், இராஜகுமாரன் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பக்கபலமாக நின்றார் என்பதையும், வழக்கறிஞர் மூலம் இராஜகுமாரன் கையெழுத்திட்டுக் கொடுத்த ஒரு சத்தியப் பிரமாண  ஆவணம்தான் சுப்ரா தனக்குரிய பங்கை சட்ட சிக்கல்கள் இன்றி மீண்டும் அடைவதற்கு காரணமாக அமைந்தன என்பதை இங்கே குறிப்பிடத்தான் வேண்டும்.

சுப்ரா – இராஜகுமாரன் நட்புறவு

முன்பு கூறியதுபோல், ஆதி.குமணன் மறைவு வரை இராஜகுமாரனுக்கும், சுப்ராவுக்கும் இடையில் அவ்வளவாக நெருக்கம் இருந்ததில்லை என்றாலும், அரசியல் ரீதியாக சுப்ராவையே தனது தலைவனாக ஏற்றிருந்தார் இராஜகுமாரன். அப்போதெல்லாம், (துன்) சாமிவேலுவுக்கும் சுப்ராவுக்கும் இடையில் கடுமையான அரசியல் போராட்டம் தொடர்ந்து கொண்டிந்த வேளையில், நயனம் இதழில் சாமிவேலுவிடம் படம் கூட எந்தப் பக்கத்திலும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் இராஜகுமாரன் கவனம் செலுத்துவார். சுப்ராவின் பிறந்த நாளின்போது, அவரது வண்ணப் படத்தை நயனம் இதழின் அட்டையிலோ, உள்ளே ஒரு பக்கத்திலோ வெளியிட்டு, அவர் குறித்த பிறந்த நாள் சிறப்பு கவிதை, கட்டுரைகள் என அமர்க்களப்படுத்துவார்.

ஆதி.குமணன் மறைவுக்குப் பின்னர், சுப்ராவை தொழில் நிமித்தம் அடிக்கடி அவர் சந்தித்த தருணங்களில், “ஆதி உங்களுக்கு எப்படி ஆதரவு தந்தாரோ, துணை நின்றாரோ, அதே போல அரசியல் விவகாரங்களில் நானும் உங்களுக்குத் துணை நிற்பேன்” என்ற உறுதி மொழியை இராஜகுமாரன் சுப்ராவிடம் வழங்கினார். அதனை இறுதி வரை காப்பாற்றினார். கடைப்பிடித்தார்.

சில சமயங்களில், மக்கள் ஓசை விவகாரங்களில் இருவருக்கும் இடையில் காரசாரமான கருத்து வேறுபாடுகள், விரிசல்கள் நிலவியபோதும், அந்த விரிசல்கள் அரசியல் களத்திற்கு விரிவடையாமல் கவனமுடன் பார்த்துக் கொண்டார் – தான் கொடுத்த உறுதி மொழியை இறுதிவரையில் பாதுகாத்தார் – இராஜகுமாரன்!

பிறகு மக்கள் ஓசை பத்திரிக்கை தொடங்கப்பட்டு நடத்தப்பட்டபோதும் எழுந்த சில கருத்து வேறுபாடுகள், சிக்கல்கள் ஆகியவற்றுக்காகவும் அடுத்த பல ஆண்டுகள் இருவருக்கும் இடையில் பல தடவைகள் நான் பேச்சு வார்த்தை நடத்தி வந்தேன். இதன் காரணமாக, இராஜகுமாரனுக்கும் எனக்கும் இடையில் மிகுந்த நட்பும், நெருக்கமும், நம்பகத்தன்மையும் ஏற்பட்டது. அது இறுதிவரையில் தொடர்ந்தது.

தம்பி மீது அன்பு – நம்பிக்கை

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆதி.குமணன் மீது இராஜகுமாரனுக்கு அளவு கடந்த அன்பும், நம்பிக்கையும் இருந்தது. ஆதி.குமணன் எத்தனை முறை கொடுத்தாலும் வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் அளவுக்கான நம்பகத் தன்மை இது. ஆதி.குமணனின் மரணமும் இராஜகுமாரனை வெகுவாகப் பாதித்தது. அடிக்கடி தனது இளைய சகோதரனைப் பற்றிக் கூறி மகிழ்வார். இறுதிவரையில் தொடர்ந்து தனது சகோதரனின் பிறந்த நாளை ஒரு நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். தனக்குப் பின்னரும் ஆதி.குமணனின் பிறந்த நாள் ஒரு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டும் என சில ஏற்பாடுகளையும் செய்துவிட்டுத்தான் இராஜகுமாரன் மறைந்தார் என இப்போது கேள்விப்படுகிறேன்.

ஆதி.குமணன் மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பின் காரணமாக, அவரது மரணத்திற்குப் பின்னர் ‘இராஜகுமாரன் இளங்கோ’ என்ற தனது பெயரையும், ‘ஆதி.இராஜகுமாரன்’ என அதிகாரபூர்வமாக தேசியப் பதிவகத்திலேயே மாற்றிக் கொண்டார்.

மனம் சஞ்சலம் அடையும்போதெல்லாம், பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரம் கொண்டிருந்த இராஜகுமாரன் நாடிப் போகும் இடம் ஆதி.குமணனின் கல்லறைதான். “அங்கு சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தால் மனம் அமைதியடைகிறது. பிரச்சனைகளில் தெளிவும், தீர்வும் கிடைக்கிறது” என அடிக்கடி கூறுவார்.

அதற்கேற்ப, அவரது இறுதி விருப்பத்தின்படி, ஆகஸ்ட் 25-இல் காலமான இராஜகுமாரனின் நல்லுடல் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 26-ஆம் நாள் தகனம் செய்யப்பட்டு, மறுநாள் (திங்கட்கிழமை ஆகஸ்ட் 27-ஆம் தேதி)  அவரது அஸ்தியின் ஒரு பாகம், நீலாய் நிர்வாணா நினைவுப் பூங்காவில், ஆதி.குமணன் கல்லறைக்கு அடுத்து, வைக்கப்பட்டு கல்லறை எழுப்பப்பட்டது. அஸ்தியின் இன்னொரு பாகம் விரைவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரது பூர்வீகக் கிராமத்தில் கரைக்கப்படும்.

இராஜகுமாரனின் நிர்வாகியாக நயனம் பத்திரிக்கையில் அவருடன் வந்து இணைந்த கோபி, அந்தப் பணியிலிருந்து விலகிய பின்னரும், இராஜகுமாரனின் இறுதி மூச்சு வரையிலும், அவரது நம்பிக்கைக்குரிய சகாவாகவும், அவரது சுகதுக்கங்களில் பங்கு கொண்டு, அவரது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பாடுபட்டவராகவும் திகழ்ந்தார்.

இராஜகுமாரனின் இலக்கிய முகம்

இதற்கிடையில், மக்கள் ஓசை தொடர்பான நிறுவன விவகாரங்களில் இராஜகுமாரனுடன் விவாதிக்கவும், கையாளவும் தொடங்கிய பின்னர் அவருக்கும் எனக்கும் இடையில் அவ்வப்போது நடந்து வந்த இலக்கிய உரையாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வெகு சொற்பமாகவே இலக்கியம் குறித்து உரையாடினோம்.

எனினும் அந்தக் குறைவான உரையாடல்களின் மூலம் இராஜகுமாரனுக்குள் இருந்த ஆழ்ந்த இலக்கியத் தன்மையையும், அவரது ஆழ்ந்த படிப்பறிவையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஜெயகாந்தன் குறித்து அடிக்கடி பேசுவார். பெரியார் சித்தாந்தங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

நல்ல இலக்கியப் படைப்பாளி. ஆனால், அவருக்கிருந்த ஆற்றலுக்கு சொந்தமாக மிகக் குறைவாகவே எழுதினார்.

இராஜகுமாரனுக்கும், அவரது இளைய சகோதரர் ஆதி.குமணனுக்கும் இயற்கையிலேயே அமைந்திருந்த இலக்கியப் படைப்பாற்றல் இறுதிவரையில் முழுமையாக வெளிக்கொணரப்படாமலே முடிந்து விட்டது என்பது எப்போதுமே எனது ஆதங்கம். பத்திரிக்கைகள் நடத்துவது, அதில் இருந்த பிரச்சனைகள், பொருளாதார அடைவுகளுக்கான போராட்டங்கள் இவற்றால், அவர்கள் இருவராலும் முழுமையாக தங்களின் இலக்கியப் படைப்பாற்றலில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்படி கவனம் செலுத்தியிருந்தால், பல அற்புதமான உள்நாட்டு இலக்கியங்கள் நமக்குக் கிடைத்திருக்கும் என்பது எனது கணிப்பு.

முத்து நெடுமாறனோடு அறிமுகம் செய்து வைத்தவர்

2008-ஆம் ஆண்டில், ‘இந்தியன் டுடே.நெட்’ (Indian Today.net) என்ற இணைய ஊடகத்தை நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தியபோது, தமிழுக்கான கணினி மென்பொருள் எழுத்துருக்கள் எனக்குத் தேவைப்பட்டன. அந்த எழுத்துருக்களை முரசு அஞ்சல் உருவாக்குநர் முத்து நெடுமாறன் தன்வசம் கொண்டிருந்தார் என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஆனாலும், முரசு அஞ்சல் மென்பொருள் அறிமுகக் கூட்டங்களில் முத்து நெடுமாறனைச் சந்தித்திருக்கிறேனே தவிர, அவருடன் நெருக்கமோ, நட்போ எனக்கு அதுவரையில் இருந்ததில்லை.

இராஜகுமாரனுக்கும் முத்து நெடுமாறனுக்கும் இடையில் நல்ல நட்பு உண்டு என்பதை அறிந்து, விஷயத்தை இராஜகுமாரனிடம் சொல்ல, அவரும் உடனே நானே உங்களை நேரில் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி, ஒருநாள் கிள்ளானில் உள்ள முத்து நெடுமாறன் இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

எனது இந்தியன் டுடே.நெட் இணைய ஊடகத்திற்குத் தேவையான அனைத்து மென்பொருள் எழுத்துருக்களையும் அப்போது முத்து நெடுமாறன் இலவசமாகவே வழங்கி உதவி புரிந்தார். “இணையத்தில் தமிழைக் கொண்டு வருவதற்கும், வளர்ப்பதற்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு எனது சிறிய பங்கு. கட்டணம் எதுவும் வேண்டாம்” என முத்து நெடுமாறன் கூறிவிட்டார். அந்த முரசு அஞ்சல் மென்பொருள் எழுத்துருக்களைக் கொண்டுதான் இந்தியன் டுடே.நெட் அப்போது வெளிவந்தது.

இராஜகுமாரன் மூலம் முத்து நெடுமாறனிடம் எனக்கு ஏற்பட்ட நட்பு, அடுத்த சில ஆண்டுகளில் எங்களுக்கிடையில் அடிக்கடி நிகழ்ந்த சில சந்திப்புகளால் மேலும் இறுக்கமானது. பல மாதங்கள் நடந்த விவாதங்களுக்குப் பின்னர் ‘செல்லியல்’ என்ற – நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் இந்த கட்டுரை பதிவேற்றம் கண்டிருக்கும் – இணைய ஊடகத்தை முத்து நெடுமாறனும் நானும் இணைந்து தொடங்குவதற்குக் காரணமாகவும்  அமைந்தது இராஜகுமாரன் அன்று ஏற்படுத்தித் தந்த அந்த அறிமுகம்தான்.

2012-இல் முத்து நெடுமாறனும் நானும் இணைந்து தொடங்கிய செல்லியல் இணைய ஊடகம் இன்று ஏழாவது ஆண்டில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இராஜகுமாரன் குறித்து நான் எழுதும் இந்த அஞ்சலிக் கட்டுரையும் அதில் பதிவேற்றம் காண்கிறது.

இதற்கெல்லாம் அன்று இராஜகுமாரன் முத்து நெடுமாறனோடு ஏற்படுத்தித் தந்த அறிமுகம்தான் முதல் தொடக்கம் என்பதை நன்றியோடு இந்த வேளையில் நினைத்துப் பார்க்கிறேன்.

70-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

இராஜகுமாரனை நான் கடைசியாகப் பார்த்தது அவரது பிறந்த நாளான ஜூலை 28-இல். நலிந்து வரும் அவரது உடல் நலம் குறித்தும்,  அவர் பெற்று வந்த சிகிச்சைகள், தங்கியிருந்த இடம் குறித்தும் நான் ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், அவரது அனுமதியில்லாமல் அவரைப் பார்க்கக்கூடாது என்பதால் அவரை நான் பார்க்காமல் தவிர்த்திருந்தேன்.

இந்த ஆண்டு, ஜூலை 28-இல் தனது 70-வது பிறந்த நாளை, நெருக்கமான சில நண்பர்களுடன் அவர் கொண்டாட விரும்பினார். தன் நண்பர் ஒருவரின் இடத்தில் கேக் வெட்டி, பிரியாணி விருந்துடன் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார் அவர். வழக்கம்போல யாரிடமும் எந்தப் பரிசையும் பெற அவர் வலுக்கட்டாயமாக மறுத்துவிட்டார்.

அந்த பிறந்த நாள் கொண்டாட்ட விருந்துக்கு என்னையும் அழைத்திருந்தார்! அன்றுதான் அவரை நான் கடைசியாகப் பார்த்துப் பேசியது!

-இரா.முத்தரசன்

பின்குறிப்பு: மறைந்த எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் இருவரின் நினைவேந்தல் நிகழ்ச்சி மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி, மாலை 4.00 மணிக்கு மஇகா தலைமையகத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகிறது.