இஸ்கண்டார் புத்திரி – ஜோகூர் மாநிலத்தில் இயங்கி வரும் உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்குத் தேவைப்படும் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களையும், நிபுணர்களையும் உருவாக்குவதில் மாநில அரசாங்கம் தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் (படம்) கூறுகிறார்.
உயிரியல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கான பற்றாக்குறை நிலவும் எனில் அதன் காரணமாக அந்தத் தொழிலின் விரிவாக்கங்கள் பாதிக்கப்படும், பின்னடைவு காணும் என அவர் மேலும் கூறினார்.
நிபுணத்துவ ஆற்றல் கொண்ட தொழிலாளர்களின் பற்றாக்குறை 64.7 ஹெக்டர் நிலப்பரப்பில் உயிரியல் தொழில் நுட்பம், சுற்றுச் சூழலியல் ஆகிய தொழில்களுக்காக ஜோகூர் மாநிலத்தில் உருவாகியிருக்கும் பையோ-எக்செல் தொழில் வளாகத்தின் முன்னேற்றத்தையும் பாதிக்கும் எனவும் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அண்மையில் இந்த பையோ-எக்செல் (Bio-XCell) தொழில் வளாகத்திற்கான வருகை ஒன்றை மேற்கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது இராமகிருஷ்ணன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
“உயிரியல் தொழில்நுட்பம் மிகப் பெரிய பலன்களைக் கொண்டுவரக் கூடிய துறை என்பதால் இந்தத் தொழில் துறை முன்னேற்றம் காண வேண்டும் என மாநில அரசாங்கம் விரும்புகிறது. பையோ-எக்செல் வளாகத்திற்கான எனது வருகையைத் தொடர்ந்து இங்கு நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. நடப்பிலிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை போதுமானதா, இங்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தொழிலாளர்களைப் பெறுவதில் ஏற்படும் சவால்கள், போன்ற விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம்” என்றும் இராமகிருஷ்ணன் கூறினார்.
இராமகிருஷ்ணன் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக மனிதவளத் துறைக்கான பொறுப்பாளருமாவார்.
உயிரியல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூரில் கூடுதல் சம்பளம் கிடைப்பதால் அங்கு வேலை செய்வதையே விரும்புகிறார்கள் என்பதும் ஜோகூர் மாநில அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்களில் ஒன்று என இராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
பையோ-எக்செல் வளாகத்தில் செயல்படும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதால், மாநில அரசாங்கம், கல்வி அமைச்சு, மனித வள அமைச்சு ஆகிய மூன்று தரப்புகளும் இணைந்து இதற்கான தீர்வுகளைக் காண வேண்டும் என்றும், இத்தகைய தொழிலாளர்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் இராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
15 உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் உயிரியல் தொழில் நுட்பத் துறையில் கற்பிக்கப்படும் பாடங்கள், அந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கும் வண்ணமும், தேவைப்படும் நிபுணத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணமும் இருப்பதை கல்வி அமைச்சு உறுதி செய்யவேண்டும் என்றும் இராமகிருஷ்ணன் மேலும் கேட்டுக் கொண்டார்.