கோலாலம்பூர் – நமது நாட்டின் வளர்ச்சியானது, வளர்ந்து வரும் நம் இளைய தலைமுறையினரை நம்பி இருப்பதால் அவர்களுக்குத் தேவையான பயனுள்ள வழியைக் காட்டுவதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வகையில், தற்போது பரவலாக நம்முடைய இளைஞர்கள் மத்தியில் காணப்படும் சமூக குற்றச்செயல்கள் மற்றும் அவற்றிலிருந்து வெளியேறத் தீர்வுகளை மையப்படுத்தி, ‘நான் கபாலி அல்ல’ என்ற புத்தம் புதிய தொடர் நாடகம் அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறவுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 9-ஆம் தேதி) தொடக்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளியேறவுள்ள இத்தொடர் நாடகத்தை அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாகக் கண்டு களிக்கலாம்.
ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளின் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “மலேசிய இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்கள் பல சமூக பிரச்சனைகள் எதிர்நோக்கி வருகின்றார்கள். அவற்றுள் பள்ளிப் பருவத்தை முடிக்காமல் இளம் வயதிலே குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் காணலாம். சுமார் 20% மாணவர்கள் தங்களுடைய இடைநிலைப் படிப்பை முடிக்காமல் பள்ளியை விட்டு வெளியேறுகின்றார்கள். இவர்கள் 13 முதல் 17 வயதுக்குள் உட்பட்டவர்கள் ஆவர். இவ்வகையான பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான சரியான தேர்வுகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘நான் கபாலி அல்ல’ தொடர் நாடகத்தைத் தயாரித்துள்ளோம். இத்தொடர்கள் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
13 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடர் நாடகத்தை ஆர். பி. ரவி மற்றும் பாரதிராஜா இயக்கியுள்ளார்கள். குண்டல் கும்பல், போதைப் பழக்கம் மற்றும் கடத்தல் ஆகிய சமூக குற்றச்செயல்கள் இத்தொடரில் சுட்டிக் காட்டப்படுள்ளது.
நம்முடைய உள்ளூர் மற்றும் வெளியூர் கலைஞர்களுடன் முக்கிய சில பிரமுகர்கள் இத்தொடர் நாடகத்தில் நடித்துள்ளார்கள்.
ஜஸ்மின் மைக்கேல், டேவிட் அந்தோணி, சேம், டாக்டர் செல்வமூத்து, கே.எஸ். மணியம், போஸ் வெங்கட், விஜத், நிரோஷா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இந்த நாடகத் தொடரில் நடித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
‘நான் கபாலி அல்ல’ தொடர் நாடகம் குறித்த மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.