கோலாலம்பூர், மார்ச் 30-ரஷியாவிலுள்ள கிரிமியா மாநில மருத்துவ பல்கலைக்கழகம் வழங்கி வந்த மருத்துவக் கல்வி திட்டத்தின் அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ லியோங் தியோங் லாய் (படம்) அறிவித்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இப்பல்கலைக்கழகம் மருத்துவப் படிப்பிற்கான பட்டத்தை வழங்கி வந்தது. முன்னாள் சோவியத் குடியரசான உக்ரெய்ன் நாட்டில் அமைந்திருக்கும் அந்தப் பல்கலைக்கழகத்தில் மலேசியாவை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
2005ஆம் ஆண்டு அப்பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிப்பதை மலேசிய அரசாங்கம் நிறுத்தியது. ஆனால் தொடர்ந்து மாணவர்கள் அங்கு மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில், அதன் மருத்துவப் பட்டப் படிப்பில் பல குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதாக புகார் பெற்றதைத் தொடர்ந்து தற்போது 1971ஆம் ஆண்டு மருத்துவ சட்டத்தின் 2ஆவது அட்டவணையில் இருந்து உடனடியாக அப்பல்கலைக் கழக அங்கீகாரம் அகற்றப்படுவதாக லியோங் தெரிவித்தார்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து கொண்ட மாணவர்கள் மருத்துவர்களாக பணியாற்ற விரும்பினால் மலேசிய மருத்துவ மன்றத்தில் பதிந்து மருத்துவச் சான்றிதழ் தேர்வை எழுத வேண்டும்.
மலேசிய மருத்துவ மன்றத்தின் மருத்துவக் கல்வி அங்கீகார தொழில்நுட்ப குழுவினரின் முடிவுக்கு ஏற்பவே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் லியோங் தெளிவுபடுத்தியுள்ளார்.