தர்மபுரி, மார்ச் 30- தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 25 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டெண்ட் அஸ்ரா கார்க் உத்தரவின் கீழ் அதிரடி தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் இந்த போலி டாக்டர்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் போலிஸ் எல்லைகளுக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு தர்மபுரி, ஆரூர் மற்றும் கிருஷ்ணகிரி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அடிக்கடி இவ்வாறு போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதாரத்துறையினர் மாவட்டம் முழுவதும் உள்ள போலி டாக்டர்கள் பெயர்களை பட்டியலிட்டு கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் உயர் நிலை பள்ளிப்படிப்பை கூட முடிக்காமல் இருந்துள்ளதுடன், இந்த 25 பேரில் மூவர் பெண் போலி டாக்டர்களாகவும் இருந்துள்ளனர்.
இதேவேளை சென்னையிலும் 200க்கு மேற்பட்ட போலி டாக்டர்கள் உலாவுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் கிடைத்துள்ளதால் இவர்களை விரைவில் கைது செய்ய காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.
எம்.பி.பி.எஸ் மருத்துவர்களிடம் உதவியாளராகவோ, கம்பவுண்டராகாவோ இருந்த அனுபவத்தை வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைகளை கையாள்பவர்கள் கிராமப்புறங்களில் அதிகம்பேர் உள்ளதாகவும், காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை கொடுக்குக்கும் இத்தகைய போலி டாக்டர்களிடம் கிராம வாசிகள் ஏமாறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
‘பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர்கள் டாக்டர்கள் என்று குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மருத்துவர் என்று குறிப்பிட அவர்களுக்கு உரிமை கிடையாது. டாக்டர்கள் பரிந்துரைத்திருப்பதை ஏற்று அவர்கள் செயல்படுத்த வேண்டும். டாக்டர் என்று போட்டுக் கொண்டு மக்களை தேவையில்லாமல் குழம்புகிறார்கள். அது ஒரு டெக்னிஷீயன் படிப்பாகும். பிசியோதெரபிஸ்டுகள் தவறான சிகிச்சை மேற்கொள்வதால் பலர் கழுத்து வலி, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.