புதுடில்லி – நேற்று வியாழக்கிழமை புதுடில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காகவும், மறுசீரமைப்புப் பணிகளுக்காகவும், மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், முதல் கட்டமாக 1500 கோடி ரூபாய் உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
எனினும், இந்தக் கோரிக்கைகளுக்கு நரேந்திர மோடி உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இன்று வெள்ளிக்கிழமை 5 பேர் கொண்ட மத்திய ஆய்வுக் குழுவினர் சென்னை வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகின்றனர்.
கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி 6 நாட்கள் கடந்தும் இன்னும் மத்திய அரசு தமிழகத்தை நோக்கிப் பாராமுகமாக இருந்து வருவது குறித்தும், இந்தியப் பிரதமர் தமிழகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இதுவரை வருகை தராதது குறித்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜக அரசை சாடி வருகின்றன.
இத்தனை சேதங்கள், பாதிப்புகள் நடந்தும், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டும், முதல் கட்டமாகக் கூட, ஒரு சிறு தொகையை ஒதுக்காத நரேந்திர மோடியின் போக்கு குறித்து தமிழக ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் கொந்தளிப்புடன் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.