புது டெல்லி: 2,000 ரூபாய் நோட்டின் சுழற்சியை மெதுவாக குறைப்பதற்கான முயற்சியில், இந்தியா, அதனை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக தி பிரிண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செயல்பாடானது 2,000 ரூபாய் நோட்டு இனி செல்லாது என்று அர்த்தமல்ல, ஆனால், படிப்படியாக இதன் புழக்கம் குறையும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
பணத்தைப் பதுக்கி வைத்தல், வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி ஆகியவற்றிற்காக மோடி அரசாங்கம் சந்தேகத்திற்கிடமின்றி இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
2016–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கருப்பு பணங்களை ஒடுக்க, 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசாங்கம் அறிவித்தது. அந்நேரத்தில், பரவலாக எதிர்கொள்ளப்பட்ட கடும் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள, அரசாங்கம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது.
500 ரூபாயும் , 1000 ரூபாயும் இனி செல்லாது என அறிவித்தப் பிறகு, மோடி அரசுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. சாதாரண நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடத்தில் பெருமளவில் பயம் ஏற்பட்டு நாடே குழப்பத்திலும், பதற்றத்திலும் இருந்தது. மக்கள் பல மணி நேரங்களாக வங்கியின் முன் நின்று தங்களுக்கான பணத்தை பெறுவதற்கு காத்துக் கொண்டிருந்தனர்.