அன்காரா: மனிதனின் செயல்பாடுகளால் ஒரு நூற்றாண்டு காலத்திற்குள், 40 விழுக்காட்டிற்கும் அதிகமான பூச்சி இனங்கள் அழியலாம் என்கிறது ஓர் ஆய்வு முடிவு.
பயாலஜிகல் கன்சர்வேஷன் (Biological Conservation) எனும் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வில், ஓராண்டிற்கு, 2.5 விழுக்காடு பூச்சி இனங்கள் அழிந்து வருகிற வேளையில்,இன்னும் நூற்றாண்டுக் காலத்தில், இந்த அழிவின் வெளிப்பாடு மோசமான பாதிப்பை மனித இனத்திற்கு தந்திடும் என எச்சரித்துள்ளது.
தீவிர விவசாயம், இதற்கு முதன்மை காரணமாக அமைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், பருவநிலை மாற்றமும், நகரமயமாக்கலும் பிற காரணிகளாக அமைகிறது.
பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற விலங்குகளின் உணவு ஆதாரமாக அமைவது இந்த பூச்சி இனங்களே. இந்த வெகுஜன அழிவைத் தடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவியலாளர்கள் கேட்டுக் கொண்டனர்.