Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்

ஏர் ஆசியா ஐரோப்பாவுக்கு மீண்டும் சிறகு விரிக்கலாம்

1205
0
SHARE
Ad

பாரிஸ் – உலகின் முன்னணி மலிவு விலை விமானப் பயண நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஆசியாவின் துணை நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸ் (AirAsia X) தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பியச் சந்தைக்குள் நுழையக் கூடும் என அதன் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ ரபிடா அசிஸ் தெரிவித்தார்.

பாரிஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 53-வது அனைத்துலக பாரிஸ் வான்காட்சி கண்காட்சியில் கலந்து கொண்ட ரபிடா அசிஸ் இந்தத் தகவலை வெளியிட்டார். எனினும் பல்வேறு வணிக ரீதியான அம்சங்களை நன்கு ஆராய்ந்த பின்னரே ஏர் ஆசியா எக்ஸ் ஐரோப்பிய சந்தைக்குள் நுழையும் முடிவை எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பாரிஸ் வான்காட்சியில் ஏர்பஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ330 நியோ இரக (A330neo aircraft) விமானத்தை அறிமுகம் செய்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ரபிடா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உரையாடியபோது மேற்கண்ட விவரங்களைக் கூறினார்.

#TamilSchoolmychoice

மிகவும் சிக்கன செலவில் இயங்கக் கூடிய இயந்திரங்களை இந்த புதிய ஏ330 நியோ இரக விமானங்கள் கொண்டிருக்கும்.

இத்தகைய ஏ330-900 இரகத்திலான 100 விமானங்களை 122 பில்லியன் ரிங்கிட் செலவில் ஏர் ஆசியா வாங்கவிருக்கிறது. இதில் 66 விமானங்களை வாங்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ஆறு விமானங்கள் என்ற முறையில் ஏர்பஸ் நிறுவனம் இந்த விமானங்களை ஏர் ஆசியாவுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.