கோலாலம்பூர்: அரசாங்கம் மின்னியல் வரியை (Digital Tax) செயல்படுத்த பரிசீலித்து வரும் நிலையில், அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக லாசாடா மலேசியா கூறுகிறது.
இந்த விவகாரத்தில் லாசாடா மலேசியா அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாக அதன் தலைமை வணிக அதிகாரி கெவின் லீ தெரிவித்தார்.
“அரசாங்கம் சரியான திசையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். தென்கிழக்கு ஆசியாவின் மின் வணிகத் தலைவராக நமது பொறுப்பு விற்பது மட்டுமல்லாமல், சிந்தனை மற்றும் கொள்கை அடிப்படையிலான மாற்றத்தையும் ஏற்க வேண்டும். இதில் முன்னணியில் இருப்பதற்கும் அரசாங்கத்தின் பல நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று அவர் கூறினார்.
முன்மொழிந்து திருத்தப்பட்ட சேவை வரிச் சட்டம் 2018-இன் கீழ், மலேசியாவுக்கு வெளியே எந்தவொரு நபரும் பொருட்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் அல்லது சேவைகளை வழங்கும் இணையத் தளங்களுக்கு, லாசாடா போன்றோருக்கு மின்னியல் வரி விதிக்கப்படும்.
ஸ்பாட்ஃபை, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான்.காம் வழங்கும் மென்பொருள், இசை, காணொளி மற்றும் மின்னியல் விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு இணைய சேவைகளுக்கும் வரி விதிக்கப்படும்.