கோலாலம்பூர்: 1எம்டிபியை நிருவகிப்பது உள்ளிட்ட திரைக்குப் பின்னால் சிறப்பு கடமைகளைச் செய்வதில் முன்னாள் பிரதமரின் அதிகாரப்பூர்வமற்ற சிறப்பு ஆலோசகராக ஜோ லோ என்று அழைக்கப்படும் தொழிலதிபர் லோ டேக் ஜோ இருந்துள்ளார் என்பதை நஜிப் ரசாக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரி இன்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
1எம்டிபி சம்பந்தப்பட்ட நஜிப்பின் விசாரணையில் சாட்சியமளித்த டத்தோ அம்ஹாரி எபெண்டி நாசாருடின் கூறுகையில், நிறுவனத்தை நிருவகிப்பதைத் தவிர, அனைத்துலக நிகழ்ச்சிகள், பணி நிமித்த பயணங்கள், வணிக திட்டங்கள் உள்ளிட்ட பல விசயங்களை உள்ளடக்கிய வேலைகளை திரைக்குப் பின்னால் இருந்து ஜோ லோ செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
“ஜோ லோ வழங்கிய ஒவ்வொரு உத்தரவும் நிறைவேற்றப்பட வேண்டும், ஏனென்றால் அவருக்கு நஜிப்பின் முன் ஒப்புதல் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்த ஒவ்வொரு கட்டளைகளையும் நான் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை, ஆனால் சில சமயங்களில் தேவைப்படும்போது, அப்போது நஜிப்பின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்த டத்தோ அஸ்லின் அலியாஸ் அல்லது நான் மீண்டும் அவரிடம் (நஜிப்) உறுதிப்படுத்துவதற்காக கேட்டுள்ளோம். பெரும்பாலான நேரங்களில், ஜோ லோ வழங்கிய அறிவுறுத்தல்கள் நஜிப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று எங்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.