சென்னை: இந்திய திரையுலகில் தனக்கென்ற ஓர் அடையாளத்தை பொதித்து வைத்து, அனைவராலும் பாராட்டப்பட்ட நடிகரென்றால் அது கமல்ஹாசன்.
தனது ஐந்தாவது வயதில் ‘களத்தூர் கண்ணம்மா‘ என்ற படத்தின் மூலமாக நடிக்க வந்த கமல்ஹாசன், இன்றுடன் தமது 60 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையை நிறைவு செய்கிறார்.
நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கமலின் பிறந்த தினத்தன்று அவரது தந்தையின் நினைவு தினம் ஆகும். அவரது சொந்த ஊரான பரமக்குடியில் தன் தந்தையின் உருவச்சிலையை கமல் திறந்து வைப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) தனது திரையுலக குருவான இயக்குனர் கே.பாலச்சந்தரின் உருவச் சிலையை சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவன அலுவலகத்தில் திறந்து வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வருகிற சனிக்கிழமை (நவம்பர் 9) இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்நிலையில், இது விவகாரமான கமல்ஹாசன் சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், நண்பர்கள் தொண்டர்கள் மற்றும் இரசிகர்கள் எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் பதாகைகள், கொடிகள்போன்றவற்றைதவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.