கோலாலம்பூர்: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தேர்வு செய்வதற்காக, குறிப்பாக எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தாது என வகைப்படுத்தப்பட்ட வேலைகளின் பட்டியல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
எதிர்காலம் இல்லாத அல்லது பட்டப்படிப்பு முடிந்தபின் வேலையின்மை அபாயத்தில் இருக்கும் படிப்புத் துறைகளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க இது மாணவர்களுக்கு உதவும் என்று அவர் கூறினார்.
“நான் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் பேசியுள்ளேன். அவர்களில் பெரும்பாலோர் தற்போதைய வேலைவாய்ப்பு யதார்த்தங்களைப் பற்றி குழப்பமடைந்துள்ளனர். அவை அடுத்த மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் இப்போதைய சூழலுக்கு பொருந்தாது அல்லது இடம்பெறாது.”
“எனவே, டிசம்பர் இறுதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ள எதிர்காலத்தில் முக்கியமான வேலைகளின் பட்டியலை அமைச்சகம் தயாரித்து வருகிறது” என்று நேற்று செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
உலக வங்கி, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ), தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (ஐஎல்எம்ஐஏ) மற்றும் டேலண்ட் கார்ப் ஆகியவற்றுடன் இணைந்து வேலை பட்டியல் செயல்முறை வழங்கப்பட்ட உள்ளதாக குலசேகரன் தெரிவித்தார்.
பணித் துறை தொடர்பான நான்கு நிறுவனங்களின் கருத்துக்கள் ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப அவை வகைப்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.